Rock Fort Times
Online News

திருச்சியில் போலீஸ் சீருடையில் “கெத்து” காட்டியவர் கைது…! * ஏற்கனவே காவல்துறையில் பணியாற்றி டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்

திருச்சி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று(ஏப்ரல் 28) சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அருண் விஜயராஜன் என்பவர் தனது முன்னோர்களுக்கு திதி கொடுக்க வந்துள்ளார். அவரை போலீஸ் சீருடையில் இருந்த ஒருவர் வழிமறித்து அவரது செல்போனை வாங்கிக்கொண்டு, ‘சந்தேகத்தின்பேரில் உன்னை விசாரிக்க வேண்டி உள்ளது. விசாரணை முடிந்தவுடன் செல்போனை திருப்பித் தருகிறேன். விசாரணைக்காக ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு வரவும் என சொல்லிவிட்டு கிளம்பி போய்விட்டார். அதன்பேரில், ஸ்ரீரங்கம் காவல் நிலையம் சென்ற அவர், இதுகுறித்து விசாரித்தபோது தாங்கள் யாரும் அழைக்கவில்லையே என்று கூறியுள்ளனர். இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், போலீஸ் சீருடையில் வந்த ஒருவர் என்னை ஏமாற்றி செல்போனை பறித்து சென்றுவிட்டார்’ என புகார் கொடுத்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவரை கைது செய்தனர். அவர், திருச்சி நவல்பட்டு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்ததும், ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதால், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டதும் தெரிய வந்தது. மேலும், வேலையில்லாமல் இருந்த அவர் இது போன்று மோசடி, வழிப்பறி செய்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்