மகா சிவராத்திரி விழா: திருச்சி, திருவானைக்காவல் கோவிலில் விடிய, விடிய காத்திருந்தும் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் தவிப்பு * கோவில் நிர்வாகம் மீது கடும் அதிருப்தி…!
பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றாக திகழும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் மகாசிவராத்திரி விழாவை சிறப்பாக நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்றைய தினம் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து விடிய, விடிய காத்திருந்தனர். ஆனால், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மிகவும் குறைவாக செய்யப்பட்டு இருந்தன. பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்ய தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு இருந்தும் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. அதற்கு தகுந்தார்போல் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர செய்யப்படவில்லை. இதனால், பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தனர். சிவனை தரிசனம் செய்ய கட்டணமாக ரூ.25 வசூல் செய்யப்பட்டது. இதில் கட்டணம் இல்லா தரிசனம் செய்பவர்களும் வந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், சிவபெருமானை தரிசனம் செய்ய பக்தர்கள் மூலஸ்தானத்திற்குள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அந்த இடத்தில் ஐந்து பேர் மட்டும் உள்ளே நுழைந்து வெளியே வரக் கூடிய நிலையில் பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் உள்ளே சென்று விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். அதேபோல கோவில் மூலஸ்தான நுழைவு வாயில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்ததால் உள்ளே சென்றவர்கள் வெளியே வர முடியாமலும், வெளியே இருப்பவர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாமலும் தவித்தனர். விஐபிக்கள் மற்றும் அவர்களுடன் வந்தவர்கள் தங்களது அதிகார பலத்தால் எளிதாக சென்று வந்தனர். இதில், கோவிலில் பணியாற்றும் முன்னாள் திமுக கவுன்சிலர் மகன் 10 பேருடன் வந்து கூட்டத்தில் தகாத வார்த்தைகளால் பேசி அவருடன் வந்தவரை சர்வ சாதாரணமாக அழைத்துச் சென்றார்.
இதேபோல முக்கிய பிரமுகர்கள் பலர் இவ்வாறு செய்ததால் விடிய, விடிய காத்திருந்த பக்தர்கள் சிவபெருமானை தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், பக்தர்கள் பலர் கோவில் நிர்வாகத்தினர் மீது அதிருப்தி அடைந்தனர். இதுபோன்ற மிகப்பெரிய விழாக்கள் நடக்கும்போது முன்கூட்டியே கூட்டத்தைக் கூட்டி மாவட்ட ஆட்சியர் நிர்வாகத்திற்கு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குளறுபடிகள் ஏற்படாமல் தடுத்திட முடியும் என தெரிவித்தனர்.
Comments are closed.