Rock Fort Times
Online News

திருச்சி மலைக்கோட்டை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது…

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு பூர்வாங்க பூஜை செய்து, தீபம் ஏற்றுவதற்கான மெகா திரியை தயார் செய்து கொப்பரையில் வைத்து எண்ணெய் ஊற்றும் பணி நடைபெற்றது. இதற்காக 300 மீட்டர் நீளமுள்ள பருத்தி துணியால் பிரமாண்ட திரி தயாரிக்கப்பட்டது. பின்னர் அதனை தூக்கிச்சென்று கயிறு கட்டி மலை உச்சியில் உச்சிப்பிள்ளையார் சன்னதி அருகே உள்ள 40 அடி உயரம் கொண்ட இரும்பு கோபுரத்தின் மேலே இருக்கும், 5 அடி உயரம் கொண்ட செப்பு கொப்பரையில் வைக்கப்பட்டது. இந்த பிரமாண்ட திரி வைக்கப்பட்ட கொப்பரையில் மொத்தம் 700 லிட்டர் அளவில் நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் ஆகியவற்றை கலந்து ஊற்றி தீபம் ஏற்ற தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.இதைத்தொடர்ந்து கார்த்திகை தீபத்திருநாளான இன்று ( 26.11.2023 ) மாலை தாயுமான சுவாமி, மட்டுவார் குழலம்மையுடன் சிறப்பு அலங்காரத்தில், பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடு செய்யப்பட்டு மலை உச்சியில் உள்ள அரச மரத்தடிக்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர் அங்கிருந்த மலையில் உள்ள கோபுரத்தின் உச்சியை பார்த்தபடி நின்றார்கள். அதை தொடர்ந்து தீபாராதனை செய்து, மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் தாயுமானவர் சன்னதி அருகே இருந்து எடுத்து வரப்பட்ட தீபத்தை கார்த்திகை தீப கோபுரத்தில் உள்ள திரியில் பற்றவைத்து, மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக தாயுமான சுவாமி சன்னதியில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தீபம் ஏற்றப்பட்ட பின் பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் மலைக்கோட்டையை சுற்றி உள்ள மற்றும் வெளி வீதிகளில் வலம் வந்தனர். மேலும் இன்று ஏற்றப்பட்ட இந்த கார்த்திகை தீபமானது தொடர்ந்து 3 நாட்களுக்கு அணையாமல் எரியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீபத்தை மலைக்கோட்டையை சுற்றி சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள மக்கள் பார்க்க முடியும்.

 

பஞ்சப்பூரில் ரூ.17.60 கோடி மதிப்பில் புதிய ஆம்னி பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா

1 of 917

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்