சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த மதுரை உதவி ஜெயிலரை நையப் புடைத்த பெண்ணால் பரபரப்பு- (வீடியோ இணைப்பு)
மதுரை மத்திய சிறையில் உதவி ஜெயிலராக பாலகுருசாமி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் மத்திய சிறையில் சிறை கைதியாக இருந்து விடுதலை செய்யப்பட்ட ஒருவர் பைபாஸ் சாலைப் பகுதியில் உணவகம் வைத்து நடத்தி வரவே அங்கு சென்று பாலகுருசாமி சாப்பிட்டு வந்துள்ளார். அந்த உணவகத்தின் உரிமையாளருக்கு இரு மகள்கள் உள்ள நிலையில் அவர்களும் அவர்களது குழந்தைகளும் உணவகத்திலே இருந்துள்ளனர். இந்தநிலையில் வழக்கம்போல உணவகத்துக்கு சாப்பிட சென்ற பாலகுருசாமி உணவக உரிமையாளரின் பேத்தியான பள்ளிச் சிறுமியிடம் தனது செல்போன் எண்ணைக் கொடுத்து ஏதாவது உதவி வேண்டுமானால் தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளார். மேலும், அந்த சிறுமியிடம் அவ்வப்போது செல்போனில் பேசி நலம் விசாரித்து வந்துள்ளார். சம்பவத்தன்று மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள ஏடிஎம் ஒன்றில் பணம் எடுத்து விட்டு வெளியே வந்த போது அந்த சிறுமியிடம் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென அங்குவந்த சிறுமியின் தாய், தன் மகளிடம் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட முயற்சி செய்ததாக கூறி நடுரோட்டில் வைத்து பால குருசாமியை சட்டையை பிடித்து இழுத்து சரமாரியாக தாக்கி திட்டினார். மக்கள் நடமாட்டம் உள்ள சாலை பகுதியில் உதவி ஜெயிலரை பெண் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக உதவி ஜெயிலர் பாலகுருசாமி, சிறுமியின் தாய் மற்றும் சிறுமி ஆகியோரிடம் மதுரை மாநகர தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில் பால குருசாமி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Comments are closed.