Rock Fort Times
Online News

16 பெட்டிகளுடன் மதுரை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் நாளை (செப். 11) முதல் இயக்கப்படுகிறது…!

மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து பெங்களூரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்துக்கு தினமும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந்தேதி முதல் நிரந்தர ரெயிலாக இயக்கப்பட்டு வருகிறது. அதாவது, சென்னை ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாராகும் பெட்டிகளை கொண்டு நவீன வசதிகளுடன் கூடிய சொகுசு ரெயிலாக வந்தே பாரத் ரெயில் உள்ளது. பிற ரெயில்களை விட வந்தே பாரத் ரெயிலில் 3 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே நேரத்தில் வந்தே பாரத் ரெயில்களின் தேவை அதிகரித்ததை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள ரெயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகளிலும் வந்தே பாரத் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் வந்தே பாரத் ரெயிலில் 7 சேர்கார் வகுப்பு பெட்டிகளும், ஒரு எக்சிகியூடிவ் வகுப்பு பெட்டியும் இணைக்கப்பட்டு இருந்தன. இந்த ரெயில் மதுரையில் இருந்து தினமும் அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் பெங்களூருவில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.40 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. வாரந்தோறும் பராமரிப்பு பணிக்காக செவ்வாய்க்கிழமை மட்டும் இந்த ரெயில் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இந்த ரெயிலில் தற்போது கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. அதாவது, நாளை (செப்.11) முதல் 14 சேர்கார் வகுப்பு பெட்டிகளும், 2 எக்சிகியூடிவ் வகுப்பு பெட்டிகளும் இணைக்கப்பட்டு, 16 பெட்டிகளுடன் கூடிய ரெயிலாக இயக்கப்பட உள்ளது. இதற்கான ரெயில் பெட்டிகள் கோழிக்கோடு ரெயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு கொண்டு வரப்பட்டன. கூடுதல் பெட்டிகள் இணைப்புக்கு பயணிகளிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்