வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது. சென்னைக்கு வடக்கே அதிகாலை 4.30 மணிக்கு கரையைக் கடந்ததாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுவடைந்தது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 15 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வந்தது. மேற்கு, வட மேற்கு திசையில் வட தமிழகம் ஆந்திர கடற்கரை பகுதிகளில் புதுச்சேரி- நெல்லூருக்கு இடையே சென்னைக்கு வடக்கே இன்று(17-10-2024) காலை 4.30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து, தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வட தமிழகத்தின் பகுதியின் மேல், தற்போது நிலவி வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று மதியத்துக்கு மேல் மழை முற்றிலும் நின்று விட்டது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் திரும்ப பெற்றுக் கொண்டது. இதனால், சென்னை உட்பட நான்கு மாவட்ட மக்களும் நிம்மதி அடைந்தனர். சென்னை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

Comments are closed.