Rock Fort Times
Online News

விமானங்களைப் போல ரயில்களிலும் பயணிகளின் ‘லக்கேஜ்’களுக்கு கட்டுப்பாடு…! * 35 கிலோவுக்கு மேல் எடுத்துச் சென்றால் கட்டணம்…

குடும்பத்தினருடன் வெளியூர் பயணம் மேற்கொள்பவர்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர். அவ்வாறு செல்லும் பயணிகள் அதிக லக்கேஜ்களை எடுத்து செல்கின்றனர். அவ்வாறு எடுத்துச் செல்லப்படும் வீட்டு உபயோகப் பொருட்களை தவிர்த்து வியாபாரப் பொருட்ளுக்கு மட்டும் கட்டணம் விதிக்கப்படுகிறது. இந்த சூழலில், இனி ரயில் பயணிகள் எடுத்துச் செல்லும் ‘லக்கேஜ்’ களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது. தற்போது விமானப் பயணிகளுக்கு குறிப்பிட்ட எடைக்கு மேற்பட்ட சுமைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோல, ரயில் பயணிகளிடமும் வசூலிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்காக நாட்டின் அனைத்து ரயில் நிலைய நுழைவாயில்களிலும் மின்னணு எடை இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளன. இவற்றில் எடை போடப்பட்ட பிறகே
லக்கேஜுகள் பிளாட்பாரம் உள்ளே அனுமதிக்கப்பட உள்ளன. ரயில்களில் முன்பதிவு இல்லாத பொதுப் பெட்டிகளில் செல்லும் பயணிகளுக்கு தலா 35 கிலோ லக்கேஜ் மட்டும் அனுமதிக்கப்படும். முன்பதிவு செய்யப்பட்ட ஸ்லீப்பர் பெட்டிக்கு 40 கிலோ, ஏசி 3டயர் பெட்டிக்கு 50 கிலோ, ஏசி 2 டயர் பெட்டிக்கு 60 கிலோ, முதல் வகுப்பு பயணிகளுக்கு 70 கிலோ என அதிகரிக்க வாய்ப்புள்ளது. ரயில்களின் அனைத்து வகைப் பெட்டிகளிலும் லக்கேஜ் வைப்பதற்காக தனி இடவசதியும் செய்யப்பட உள்ளது. ஓடும் ரயில்களில் பயணச்சீட்டு பரிசோனையைப் போல், லக்கேஜ் எடைகளையும் தோராயமாக சோதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றம் சோதனை அடிப்படையில் உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் தெரியவரும் குறைகளை சரிசெய்து, இத்திட்டம் நாடு முழுவதிலும் அமல்படுத்தப்பட உள்ளது. ரயில் நிலையங்களில் அனைத்து வகையானப் பொருட்கள் விற்பனையுடன் தரமான உணவு விடுதிகளும் இடம்பெற உள்ளன. இதற்கான கடைகள் விரைவில் டெண்டர் முறையில் ஒதுக்கப்பட உள்ளன. இந்த மாற்றங்களால் ரயில்வே துறையின் வருவாய் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்