Rock Fort Times
Online News

ரூ.30 ஆயிரத்திற்கு ” லைஃப்டைம் ” டோல் பாஸ் ! நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டம்

நம்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை கடக்க ரூ.30,000க்கு லைஃப் டைம் பாஸ் பெறும் வசதியை விரைவில் மத்திய அரசு அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கார் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் சொல்லப்படுகிறது. இதேபோல 3000 ரூபாய்க்கு ஒரு வருட ஆஃபரும் தரப்போகிறார்களாம்.இப்படி செய்வதன் மூலம் தேவையற்ற போக்குவரத்து நெரிசல்களையும், வாகன ஓட்டிகளுக்கு சுங்கச்சாவடி கட்டணம் குறித்த அதிக செலவையும் தவிர்க்க முடியும் என்று சொல்லப்படுகிறது.சமீபத்தில் தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்திருந்த மத்திய அரசின் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, சுங்கச்சாவடி கட்டணங்கள் குறித்து ஏராளமான புகார்கள் வந்திருப்பதாகவும், இந்த புகார் மீது ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது என்றும், விரைவில் பயணிகளின் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில், சுங்கச்சாவடி கட்டண வசூல் முறையில் மாற்றம் வரப்போகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது தற்போது வரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் மாதாந்திர கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வருகிறது. மாதம் ரூ.340 என்று இந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆண்டுக்கு ரூ.4,080 வருகிறது. இந்த தொகையை செலுத்திவிட்டால் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியை எத்தனை முறை வேண்டும் என்றாலும் கடந்து செல்லலாம். ஆனால் இந்த கட்டணம் அதிகமாக இருப்பதாகவும், அதே நேரம் இதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் இதற்கான தீர்வுக்கு முயன்று வந்தது. அதன்படி ஆண்டு கட்டண நடைமுறை கொண்டுவரலாம் என யோசித்து வருகிறது. ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தி இந்தியாவில் உள்ள எந்த டோல்கேட்களையும் எத்தனை முறை வேண்டுமானாலும் கடந்துக்கொள்ளலாம். அதேபோல ரூ.30,000 செலுத்தினால் 15 ஆண்டுகளுக்கு நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை இலவசமாக கடந்து செல்லலாம் என்கிற திட்டத்தை நடைமுறைப்படுத்த போக்குவரத்து துறை அமைச்சகம் யோசித்து வருகிறது. இதற்கான முன் நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்றும், இது விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படி செய்வதன் மூலம் கார் ஓனர்களுக்கு இரண்டு விஷயங்களில் பலன் கிடைக்கும். ஒன்று, முந்தைய கட்டணத்தை விட இதில் கட்டணம் குறைவு. இரண்டாவது சிக்கலற்ற பயணம் சாத்தியமாகும்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்