திருச்சி சிறையில் ஆயுள் தண்டனை கைதி மீது தாக்குதல்: வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவு…!
மதுரையை சேர்ந்தவர் ஹரிஹரசுதன். ஆயுள் தண்டனை கைதியான இவர் பத்தாம் வகுப்பு படித்துள்ளார். இவர் சிறையில் ஐடிஐ படிக்க விருப்பப்பட்டார். நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கடந்தாண்டு அக்டோபர் மாதம் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு ஐடிஐ படித்து வருகிறார். கடந்த மாதம் 26-ம் தேதி உடல்நிலை சரியில்லாததால் அவரது அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிறை அதிகாரி மணிகண்டன், வேலை நேரத்தில் ஏன் தூங்குகிறாய் என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஹரிஹரசுதன் உட்பட ஐந்து பேர் தன்னை தாக்கியதாக சிறை அதிகாரி மணிகண்டன், கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஹரிஹரசுதனின் தாய் அங்கம்மாள், மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “எனது மகன் ஹரிஹரசுதனை 2020-ம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில் மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. முதலில் என் மகன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஐ.டி.ஐ. படிக்க விண்ணப்பித்தார். படிப்பிற்காக 6 மாதங்களுக்கு முன்பு திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு 26.7.2025 அன்று, சிறை அறையில் படுத்திருந்த என் மகனை, ஏன் படுத்திருக்கிறாய்? எனக்கேட்டு, துணை ஜெயிலர் லத்தியால் தாக்கியுள்ளார் . சிறை காவலர்களும் எனது மகனை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்துள்ளார். இதில் அவருக்கு ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. என் மகனை வக்கீல்கள் சந்திக்கவும் அனுமதிக்கப்படவில்லை. மேலும், அவரை அடித்து இழுத்துச் சென்று தனி அறையில் அடைத்தபோது, தண்ணீர் கொடுத்ததற்காக திண்டுக்கல்லை சேர்ந்த அலெக்ஸ் என்ற கைதியையும் சிறை காவலர்கள் தாக்கி உள்ளனர். என் மகனை சிறையில் தாக்கியது முழுக்க முழுக்க மனித உரிமை மீறல். எனவே சம்பந்தப்பட்ட திருச்சி சிறை டி.ஐ.ஜி.பழனி, துணை ஜெயிலர் மணிகண்டன் ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என் மகனுக்கு சிறையில் நடந்த கொடுமைகள் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தனிமை சிறையில் இருக்கும் என் மகனை அந்த அறையில் இருந்து விடுவிக்க வேண்டும். உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, பூர்ணிமா அமர்வு முன்பாக இன்று (ஆகஸ்ட் 11) விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில், மனுதாரர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹரிஹரசுதன் சிறையில் தனது நண்பர்களுடன் இணைந்து கொண்டு ஜெயிலர் மணிகண்டன் மீது உள்ள முன்விரோதம் காரணமாக அவரது பெயரை கெடுக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், “ஹரிஹரசுதனை தாக்கியது தொடர்பாக அவரது தாயார் அளித்த புகார் மற்றும் ஜெயிலர் மணிகண்டன் அளித்த புகார் மனு இரண்டையும் சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
Comments are closed.