திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகாவிற்கு உட்பட்ட குளத்தூராம் பட்டியைச் சேர்ந்த யாக்கோபு-மேரி தம்பதிக்கு 4 மகன்கள் மற்றும் 7 மகள்கள். இவர்களது கடைசி மகள் விக்டோரியாவுக்கும் (21), அதே கிராமத்தைச் சேர்ந்த மோசஸ் ஆரோக்கியராஜ்(30) என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. விக்டோரியாவுக்கு குழந்தை இல்லாததால் அவரை மாமியார் மற்றும் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக கணவன்- மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனை தனது தாயிடம் கூறி விக்டோரியா வருத்தப்பட்டு வந்தார். இந்நிலையில் வழக்கின் சம்பவ தினத்தன்று குளத்தூராம் பட்டியைச் சேர்ந்த வின்சென்ட் பால்ராஜ் மகன் மார்டின் என்பவர் விக்டோரியாவின் சகோதரருக்கு போன் செய்து உங்கள் தங்கை விக்டோரியா அவரது வீட்டில் மயங்கிய நிலையில் கிடப்பதாக தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மேரி அவரது மகன் மற்றும் உறவினர்களுடன் குளத்தூராம்பட்டிக்கு வந்து பார்த்தபோது கை, கால்கள் விரைத்த நிலையில் கழுத்தில் காயத்துடன் விக்டோரியா இறந்து கிடந்துள்ளார். அவர் எப்படி இறந்தார் என்று கேட்டபோது யாரும் சரிவர பதில் சொல்லவில்லை. இதனால், மேரி தனது மகளின் இறப்பில் சந்தேகமாக உள்ளதாகவும் சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கும்படி வையம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 07.12.2018 ம்தேதி அதிகாலை 4 மணியளவில் மோசஸ் ஆரோக்கியராஜின் தாய் அருள்மணி தனது வீட்டிலிருந்து சிவப்பு நிற நைலான் கயிற்றை எடுத்து வந்து, மோசஸ் ஆரோக்கியராஜிடம் கொடுத்ததோடு, தூங்கிக் கொண்டிருந்த விக்டோரியாவின் கையை பிடித்துக் கொண்டும், சத்தம் போடவிடாமல் வாயை பொத்திக் கொள்ள, மோசஸ் ஆரோக்கியராஜ் விக்டோரியாவின் கழுத்தில் கயிற்றை போட்டு இறுக்கி படுகொலை செய்துள்ளது தெரியவந்தது. இதைஅடுத்து வையம்பட்டி போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்த கொலை வழக்கு திருச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவுற்ற நிலையில் நேற்று(14-10-2025) தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டதால் விக்டோரியாவை கொலை செய்த மோசஸ் ஆரோக்கியராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி பி.சரவணன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கிலிருந்து அருள்மணி விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஏ.ஆனந்தன் ஆஜராகி வாதாடினார்.
Comments are closed.