ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். அப்போது திருப்பதியில் இருந்து திருமலைக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக செல்லும் அலிபிரி வழித்தடத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன் சிறுத்தைகள், கரடிகள் நடமாட்டம் இருந்தன. சிறுத்தை தாக்கியதில் சிறுமி ஒருவர் பலியானார். ஒரு சிறுவன் காயம் அடைந்தான். இதனைத்தொடர்ந்து மலைப்பகுதியில் அட்டகாசம் செய்த சிறுத்தைகள் மற்றும் கரடிகள் வனத்துறையினரால் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டன.
அதன்பிறகு இந்த பகுதியில் சிறுத்தைகள், கரடிகள் நடமாட்டம் குறைந்து இருந்தது. இந்நிலையில், தற்போது நடைபாதையில் உள்ள லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவில் அருகே சிறுத்தை, கரடி ஆகியவற்றின் நடமாட்டம் இருப்பது அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ட்ராப் கேமராக்களில் பதிவாகி உள்ளது. எனவே, திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் குழுக்களாக பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும் என்று தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.