Rock Fort Times
Online News

“தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டது”-மத்திய இணை அமைச்சர் முருகன்…

மத்திய அரசின் ரோஜ்கார் மேளா திட்டத்தில், அரசு பணியில் நியமனம் பெற்றவர்களுக்கு திருச்சியில் பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.அரசு பணிகளில் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு அதற்கான ஆணையை மத்திய இணை அமைச்சர் முருகன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி, ஒரு ஆண்டுக்குள் 10 லட்சம் பேர் மத்திய அரசு பணிகளில் நியமனம் செய்யப்படுவர் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். அதன்படி கடந்த அக்டோபர் மாதம் முதல் தற்போது வரை 9 லட்சம் பேர் மத்திய அரசு பணியில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விரைவில், ஒரு லட்சம் பேர் பணி நியமனம் செய்யப்படுவர். மேற்கு வங்கதேசத்தில் கொடூர தாக்குதல்கள், சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டு அரசாங்கமே இருக்க முடியாத அளவுக்கு சூழல் உருவானது. ஜனநாயத்தின் மீதும், கூட்டாட்சி தத்துவத்தின் மீதும் நம்பிக்கை இருந்ததால் அந்த அரசாங்கத்தை எதுவும் செய்யவில்லை. தமிழகத்தில் தற்போது, சட்டம்– ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கவர்னர் மாளிகை நோக்கி பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. திருவாரூர் சென்று ஆதீனத்தை சந்தித்து விட்டு வரும் வழியில் கவர்னரின் வாகனத்தை தாக்கியுள்ளனர். கவர்னருக்கே பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளதால், சாதாரண மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. தி.மு.க. ஆட்சியில் எங்கு பார்த்தாலும் வெட்டுக் குத்து சம்பவங்கள் நிகழ்கின்றன. ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசியதை சாதாரண நிகழ்வாக பார்க்கக் கூடாது. அந்த நபருக்கு பின்னணியில் இருந்து இயக்கியது யார்? இந்த வழக்கை சி.பி.ஐ., அல்லது என்.ஐ.ஏ., விசாரித்தால் தான் முழு உண்மை தெரிய வரும். கோவையில் சிலிண்டர் வெடிப்பு என்று போலீசார் மறைத்த சம்பவத்தை என்.ஐ.ஏ., விசாரித்த பின், தீவிரவாதிகள் குண்டு தயாரிப்பதற்காக ஏற்பாடு செய்ததை கண்டுபிடிக்க முடிந்தது. நேற்று கோவையில் பாலஸ்தீன கொடியை ஏற்றி உள்ளனர். சென்னை ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் போடுகின்றனர். தேசவிரோத செயல்கள், தேச விரோதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கவர்னர் மாளிகையில் குண்டு வீசியதை என்.ஐ.ஏ., விசாரிக்க வேண்டும். குண்டு வீசிய நபரை, தி.மு.க., பொறுப்பில் உள்ள வக்கீல் தான் ஜாமீனில் எடுத்துள்ளார். ஆனால், சட்டத்துறை அமைச்சர் பொறுப்பில்லாமல், மக்களை திசை திருப்பும் விதமாக பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.
அரசியல் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், அரசியலாகவே பதில் சொல்கிறேன். தி.மு.க., அரசாங்கத்தை பலமுறை கலைத்தது காங்கிரஸ். அவர்களோடு தான் கூட்டணி வைத்து கொஞ்சிக் குலாவுகின்றனர். பா.ஜ.வினர் மீது தாக்கப்பட்ட சம்பவம் குறித்து நான்கு பேர் கமிட்டி விசாரணை நடத்தி வருகிறது. சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து, தேசிய தலைவர்களிடம் அறிக்கை கொடுப்பார்கள். அதன் மீது, அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.

நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான‌ மேடைப் பேச்சு...

1 of 918

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்