Rock Fort Times
Online News

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது; திமுக ஆட்சியை மக்கள் புறக்கணிப்பார்கள்…* திருச்சியில் நயினார் நாகேந்திரன் பேட்டி!

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு இருமுறை வருகை தந்து தமது கூட்டணி கட்சிகளை ஆதரித்து பேசினார். அந்த வகையில் மூன்றாவது முறையாக திருச்சியில் வருகிற 11-ம் தேதி நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார். இதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்கிறார்கள். இந்நிலையில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் இன்று (மார்ச் 6) பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், வருகிற 11ம் தேதி பாரத பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில் திருச்சியில் நடைபெற உள்ளது. மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 4000 கோடி ரூபாய் அளவிலான திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்தார். திருச்சியில் நடைபெற உள்ள கூட்டத்திலும் பல்வேறு நலத்திட்டங்களை அறிவிக்க உள்ளார். நிச்சயமாக தமிழக மக்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை எதிர்நோக்கிக் கொண்டு இருக்கின்றனர். வெகு விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். தொகுதி பங்கீடு குறித்து தற்போது ஏதும் சொல்ல முடியாது. நாங்கள் கூட்டணியில் உறுதியாக உள்ளோம். திமுக- காங்கிரஸ் போல இழுபறி இருக்காது. தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் அதிகரித்து உள்ளது. சட்டம்- ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது.இதற்கு உதாரணமாக நாங்குநேரி சம்பவம், சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் சம்பவங்களே சாட்சி. டிஜிபி கூட உங்களால் நியமிக்க முடியவில்லை. பிறகு எப்படி ஆட்சி நல்ல முறையில் நடக்கும். எனவே, இந்த ஆட்சியை மக்கள நிராகரிப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்