வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு…* ஆவின் பால் பாக்கெட்டுகளில் விழிப்புணர்வு வாசகம்…!
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஆறு மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதற்காக தமிழகம் முழுவதும் எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந்தேதி வெளியானது. அப்போது பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. எஸ்.ஐ.ஆர். பட்டியலில் இடம்பெறாதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேர்தல் ஆணையம் கால அவகாசம் வழங்கியது. அதன்படி, கடந்த 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது. வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள், இந்த சிறப்பு முகாமில் கலந்துகொண்டு மீண்டும் விண்ணப்பித்தனர். மேலும், வருகிற 3 மற்றும் 4 ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்ய ஜனவரி 18 ம் தேதி கடைசி நாளாகும். இந்த நிலையில், எஸ்.ஐ.ஆர். குறித்த விழிப்புணர்வு வாசகம் ஆவின் பால் பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதில், வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள், தங்களது பெயரை மீண்டும் இணைப்பதற்கான கடைசி தேதி (18-01-2026) என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. பிப்ரவரி 17 ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இறுதி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களே வருகிற சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.