திருச்சி மாவட்டம், குமாரவயலூர் சுப்பிரமணியசுவாமி கோயில் தென்னாட்டில் புகழ்வாய்ந்த முருகன் தலங்களில் சிறப்பு வாய்ந்த திருத்தலமாக விளங்கி வருகின்றது. அருணகிரிநாதருக்கு காட்சி தந்து, திருப்புகழ் பாட அருளிய தலமாகும். திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் தம் வாழ்நாள் எல்லாம் போற்றி வணங்கிய சிறப்பு வாய்ந்த இத்திருத்தலத்தில் வருகிற 4-ந் தேதி முதல் 8-ந்தேதி முடிய 5 நாட்கள் பங்குனி உத்திரப்பெருவிழா நடைபெற உள்ளது. 4-ந் தேதி அன்று பங்குனி உத்திரவிழாவினை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. தற்போது கடந்த 12.02.2023 அன்று கோயிலில் பாலாலயம்
நடைபெற்றுள்ளதால், சுவாமி திருவீதி உலா நடைபெறுவது கோயிலின் உள்ளே நடைபெறும்.
இதர அபிஷேகங்களும் நடைபெற உள்ளது. 4-ந் தேதி அன்று நடைபெறும் பங்குனி உத்திரப் பெருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு அதிகாலை 4மணி முதல் இரவு 11 மணிவரை சிறப்பு பேருந்துகள் விட ஏற்பாடுகள் செய்யப்பெற்றுள்ளது. திருச்சி மாநகரின் பல்வேறு பகுதியில் இருந்து வருகை தரும் பக்தர்கள் வந்துசெல்வதற்கு சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தினால் இயக்கப்படுகின்றது, பாதுகாப்பு பணிகளை சோமரசம்பேட்டை காவல்நிலையத்தினர் செய்துவருகின்றனர். விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலைய துறை, இணை ஆணையர் செல்வராஜூ அறிவுரையின்படி உதவிஆணையர்/தக்கார் லெட்சுமணன் ,கோயில் நிர்வாக அதிகாரிஅருண் பாண்டியன், மற்றும் கோயில் பணியாளர்களும் செய்துவருகின்றனர்.
