Rock Fort Times
Online News

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பயணி தவறவிட்ட ரூ.50 ஆயிரத்தை கண்காணிப்பு கேமரா மூலம் பார்வையிட்டு மீட்ட போலீசாருக்கு பாராட்டு…!

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை, மலம்பட்டியை சேர்ந்தவர் சவரிமுத்து (வயது 58). உழைத்த சம்பாத்தியத்தில் கார் வாங்க வேண்டும் என்பது இவரது நீண்ட கால கனவு. இதற்காக சிறுக, சிறுக சேமித்த ரூ.2 லட்சத்துடன் திருச்சி மத்திய பேருந்து நிலையம் வந்தடைந்த அவர், அங்கிருந்து டவுன் பஸ்ஸில் ஏறி தலைமை தபால் நிலையத்தில் இறங்கினார். அங்கிருந்து கார் ஷோரூம் நோக்கி நடந்து சென்றார். கார் ஷோரூமில் காரை தேர்வு செய்த சவரிமுத்து, முன் தொகையாக தான் கொண்டு வந்த 2 லட்சம் ரூபாயை ட்ரவுசர் பாக்கெட்டிலிருந்து எடுத்தபோது அதில் 50 ஆயிரத்தை தவறவிட்டதை உணர்ந்தார். இதுகுறித்து அவர் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த முஸ்லிம் தம்பதியினர் கீழே கிடந்த 50 ஆயிரம் ரூபாயை எடுத்துச் சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அந்த வண்டி எண்ணை கண்டறிந்தனர். அதன் தொடர்ச்சியாக உரிமையாளரின் பெயர், விலாசத்தை கண்டுபிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் பணத்தை எடுத்ததை ஒப்புக்கொண்ட தம்பதியினர், தாங்கள் பணத்தை செலவு செய்து விட்டதாகவும், ஓரிரு தினங்களில் நேரடியாக காவல் நிலையத்தில் ஒப்படைத்து விடுவதாக உறுதி கூறினர். சொன்னது போலவே அவர்கள் பணத்தை ஒப்படைக்கவே பணத்திற்கு உரியவரான சவரிமுத்துவிடம் அந்தப் பணத்தை காவல்துறை உதவி ஆணையர் யாஸ்மின் ஒப்படைத்தார். பணத்தை ஒப்படைத்த தம்பதியினருக்கும், பணத்தை மீட்டுக் கொடுத்த போலீஸ் அதிகாரிகளுக்கும் சவரிமுத்து தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்த பொதுமக்களும் போலீசாரை வெகுவாக பாராட்டினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்