Rock Fort Times
Online News

கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு:- விசாரணைக்கு ஆஜராகும்படி சுதாகரனுக்கு சம்மன்…!

நீலகிரி மாவட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் உள்ளது. அவரின் மறைவிற்கு பிறகு கடந்த 2017 ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி இந்த எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் விசாரித்து வருகின்றனர். சிபிசிஐடி, ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான காவல்துறையினர் 250 க்கும் மேற்பட்டோரிடம் இந்த வழக்கில் வாக்குமூலம் பெற்றுள்ளனர். கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முதன்மைப் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீரபெருமாள் என்பவருக்கு அண்மையில் சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.அதன்படி கடந்த 11-03-2025 அன்று வீரபெருமாள் ஆஜராகி இருந்தார். இந்நிலையில் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். மார்ச் 27ம் தேதி சிபிசிஐடி முன் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கோடநாடு எஸ்டேட் முன்னாள் பங்குதாரர் என்ற அடிப்படையிலும், குற்றம் சாட்டப்பட்ட ஒரு தரப்பிலும் சுதாகரனை விசாரிக்க வேண்டும் என கூறப்பட்டதாலும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்