முக்கிய பேட்ஸ்மேன்கள் மீண்டும் சொதப்பல்: சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணியை ஒயிட் வாஷ் செய்த நியூசிலாந்து…!
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.இரு நாடுகள் இடையேயான மூன்று டெஸ்ட் போட்டி தொடர் நடந்து வருகிறது.
இதில், 2 டெஸ்ட் போட்டிகளை நியூசிலாந்து வென்று தொடரைக் கைப்பற்றியது. 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்களுக்கு ஆல்- அவுட் ஆனது. அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி சுப்மன் கில்(90), ரிஷப் பண்ட்(60) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 263 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றது.
பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 174 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. ஜடேஜா அதிகபட்சமாக 5 விக்கெட் வீழ்த்தினார்.
இதனைத்தொடர்ந்து 147 ரன் என்ற இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. ஆனால், இந்திய அணி வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஜெயிஸ்வால் 5, ரோகித் சர்மா 11, சுப்மன் கில் 1, விராட் கோலி 1, சர்பராஸ் கான் 1 ரன்னுக்கு பெவிலியன் திரும்பினர்.
ரிஷப் பண்ட் மட்டும் தனி ஆளாக போராடினார். அவரும் 64 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனதும் இந்தியாவின் தோல்வி உறுதியானது. முடிவில் இந்திய அணி 121 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. இதன்மூலம் 25 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்தது நியூசிலாந்து.
Comments are closed.