கரூர் சம்பவம்: காவல்துறை அதிகாரிகளை கைது செய்யாமல் த.வெ.க. நிர்வாகிகளை மட்டும் கைது செய்வது ஏன்?* அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்!
திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று( செப்.30) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கரூர் துயர சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. இதுதொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.ஆகவே அது தொடர்பாக எதுவும் பேச விரும்பவில்லை என்று கூறினார். அப்போது, கும்பமேளா மற்றும் பெங்களூர் கிரிக்கெட் கொண்டாட்டம் ஆகியவற்றில் உயிரிழப்புகள் நடந்த போது அந்த அரசாங்கம் காவல்துறை அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுத்தது. ஆனால் தமிழக அரசு, த.வெ.க. நிர்வாகிகளை மட்டும் கைது செய்துள்ளது. அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் பதில் அளிக்கையில், தமிழக வெற்றி கழகத்தினர் கூட்டத்தை ஒருங்கிணைப்பதில் தவறு செய்து விட்டனர். அனைவருக்கும் மனிதாபம் என்று ஒன்று உள்ளது. உயிரிழப்புகளில் அவர்களுக்கும் மனவேதனை இருக்கும். ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அதற்கான அறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். இதில் யார் தவறு செய்து இருந்தாலும் அவர்கள் மீது முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்தார்.

Comments are closed.