Rock Fort Times
Online News

கரூர் சம்பவம்: ஒரு நபர் ஆணையம், எஸ்.ஐ.டி. விசாரணை நிறுத்தி வைப்பு…!

கரூரில், விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க தமிழக அரசு, ஒரு நபர் ஆணையத்தை அமைத்து இருந்தது. மேலும், வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில், சிறப்பு விசாரணைக் குழுவை உயர் நீதிமன்றம் அமைத்து இருந்தது. இக்குழுவினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணையை துவக்கினர். இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும், இந்த விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ரஸ்கோகி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு விபரம் தற்போது வெளியாகி உள்ளது. அதில்,
1. கடந்த 27.09.2025 கரூர் நகர போலீஸ் ஸ்டேசனில் பதிவு செய்யப்பட்ட வழக்கு எண் 855/2025 சிபிஐக்கு மாற்றப்படுகிறது.
2. சிபிஐ இயக்குநர், இந்த வழக்கை விசாரிக்க மூத்த அதிகாரியை நியமிக்க வேண்டும். அவருக்கு உதவ வேறு சில அதிகாரிகளையும் நியமிக்க வேண்டும்.
3. கரூர் எஸ்பி, கரூர் நகர போலீசார், சென்னை ஐகோர்ட் நீதிபதி அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவினர் மற்றும் முதல்வர் அமைத்த விசாரணை ஆணையம் ஆகியோர் தங்களிடம் உள்ள வழக்கு, அது தொடர்பான ஆவணங்கள், தற்போது வரை சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் (டிஜிட்டல் உள்ளிட்ட எந்த வடிவில் இருந்தாலும்) ஆகியவற்றை உடனடியாக சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

4. இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுவதால், சிறப்பு புலனாய்வு பிரிவு அல்லது ஒரு நபர் விசாரணை கமிஷன் சஸ்பெண்ட் செய்யப்படுகிறது.
5. இந்த வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகளுக்கு தமிழக அரசு தேவையான உதவிகள் மற்றும் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

 இந்த குழுவின் செயல்பாடுகள்:

1. சிபிஐக்கு மாற்றப்பட்ட வழக்கு விசாரணையை கண்காணிப்பதுடன், விசாரணைக்கு தேவையான உத்தரவுகளை பிறப்பிப்பது.
2. சிபிஐ விசாரணையை கண்காணிப்பது
3. சிபிஐ சேகரிக்கும் ஆதாரங்களை உடனுக்குடன் ஆய்வு செய்ய இக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது.
4. கரூர் சம்பவம் தொடர்பான விசாரணை நேர்மையாக, வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும் நடப்பதை உறுதி செய்ய இந்த குழுவினர், எந்த விஷயம் தொடர்பாகவும் விசாரிக்கலாம்.
5. முன்னாள் நீதிபதி பிறப்பிக்கும் உத்தரவு அடிப்படையில் விதிமுறைகளை இக்குழு வகுத்துக் கொள்ளலாம். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்