கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருச்சியில் மாபெரும் கால்பந்து போட்டி…!
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துரை வைகோ எம்பி, சென்னை மேயர் பிரியா தொடங்கி வைத்தனர்...
முன்னாள் முதல்வர், முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருச்சியில் மாபெரும் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில், இரு தரப்பிலும் பல்வேறு அணிகள் பங்கேற்றன. ஆண்கள் கால்பந்து போட்டியினை திருச்சி மக்களவை உறுப்பினர்
துரை வைகோவும், பெண்கள் கால்பந்து போட்டியினை சென்னை மேயர் பிரியாவும் தொடங்கி வைத்தனர். போட்டியை ஒருங்கிணைத்த மக்கள் பிரதிநிதிகளுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி நன்றி தெரிவித்து கொண்டார்.
அப்போது அமைச்சர் கூறுகையில், அன்பு சகோதரர் துரை வைகோ நாடாளுமன்றம் என்ற ஆடுகளத்திற்கு சென்றுள்ளீர்கள். அங்கு உங்களுடைய கேப்டன் நமது முதலமைச்சர் மு க.ஸ்டாலின். மாநில உரிமைகளை மீட்டெடுப்பதற்கான போட்டியில் நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். நாடாளுமன்றத்தில் உங்களுடைய குரல் ஓங்கி ஒலிக்கும்.அது திருச்சியின் குரலாக ஓங்கி ஒலித்து திருச்சிக்கு பெருமை சேர்ப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என பேசினார். தொடர்ந்து பேசிய துரை வைகோ, விளையாட்டு என்பது இன்றைய தலைமுறையினருக்கு அவசியமான ஒன்று.ஆரோக்கியமான வாழ்விற்கு விளையாட்டு முக்கியம் என்று கூறினார். சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பேசுகையில், ஒவ்வொரு நிகழ்விலும் பெண்களுக்கு முக்கியத்துவம் சம வாய்ப்பு அளிக்கப்படுவதற்கு வித்திட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர். விளையாட்டு என்பது கல்வியை போல் முக்கியமான ஒன்று.விளையாட்டு உடல் மற்றும் மனதை உறுதிப்படுத்தும் எனக் கூறினார். இதில், கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன், மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி, பொன்னம்பட்டி பேரூராட்சி தலைவர் சரண்யா மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
Comments are closed.