தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான மறைந்த செல்வி ஜெயலலிதா கடந்த 1991-96 காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை முதலில் தமிழ்நாட்டிலும், அதன்பிறகு கர்நாடக மாநிலத்திலும் நடத்தப்பட்டது. ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இவர்களுக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு ஜெயலலிதா சென்றார். அங்கு ஜெயலலிதா குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டது. பின்னர் வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றது. இவ்வாறு விசாரிக்கப்பட்டு வந்த போது உடல்நலக் குறைவால் ஜெயலலிதா காலமானார். இதனால் வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுவித்து விட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கு மட்டும் தண்டனை வழங்கப்பட்டது. இதற்கிடையில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள் அனைத்தும் பெங்களூரு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு முடிவடைந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் தொகையை அரசு கருவூலத்தில் சேர்த்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் ஜெயலலிதா சொத்துகளை ஏலம் விட வேண்டும் என்று பெங்களூருவை சேர்ந்த RTI ஆர்வலர் நரசிம்மமூர்த்தி கர்நாடக அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அவ்வப்போது கேள்வி எழுப்பி வந்தார். இந்த சூழலில் முக்கியமான தகவல் தற்போது கிடைத்துள்ளது. கர்நாடக அரசு வெளியிட்ட தகவலின்படி, ஜெயலலிதா சொத்துகளை ஏலம் விடுவது பற்றி முடிவு செய்யும் வகையில் அரசு வழக்கறிஞர் கிரண் எஸ்.ஜாவலி நியமிக்கப்பட்டுள்ளார். ஏலம் விடுவது தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் இனி வழக்கறிஞர் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு அதன் நகலை உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு சமர்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஜெயலலிதா சொத்துகளை பொறுத்தவரை வைரம், முத்து, பவளம் உள்ளிட்ட விலை உயர்ந்த கற்கள், தங்க நகைகள், 700 கிலோ வெள்ளிப் பொருட்கள் ஏலம் விடப்பட உள்ளன. இதனுடன் 11,344 விலை உயர்ந்த புடவைகள், 44 குளிர் சாதன இயந்திரங்கள், 91 கைக் கடிகாரங்கள், 27 சுவர் கடிகாரங்கள் ஆகியவையும் ஏலத்திற்கு வருகின்றன. மேலும் 86 விசிறிகள், 146 அலங்கார சேர்கள், 81 தொங்கு விளக்குகள், 20 சோபா செட், 750 அலங்கார செருப்புகள், 31 டிரஸ்ஸிங் டேபிள் கண்ணாடிகள் ஏலம் விடப்படுகின்றன. 215 கிரிஸ்டல் கண்ணாடிகள், 3 இரும்பு லாக்கர்கள், 250 சால்வைகள், 12 குளிர்பதனப் பெட்டிகள், 10 தொலைக்காட்சி பெட்டிகள், 8 வி.சி.ஆர், 1,040 வீடியோ கேசட்கள் ஆகியவை ஏலத்திற்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
