Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கைசிக ஏகாதசி விழா…

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் கைசிக ஏகாதசி விழா நேற்றும், இன்றும் நடைபெற்றது. 108 வைணவத்திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரியதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஏகாதசி தினத்தன்று கைசிக ஏகாதசி விழா நடைபெறும். இந்தாண்டு கைசிக ஏகாதசி விழா நேற்றும்( 23.11.2023 ) இன்று அதிகாலை வரை நடைபெற்றது. இதனையொட்டி நேற்று உற்சவ நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து முதல் புறப்பாடாக காலை 10 மணிக்கு புறப்பட்டு காலை10.30 மணிக்கு சந்தனு மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கு காலை 11.30 மணி முதல் பகல் 1.30 மணிவரை நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் சந்தனு மண்டபத்திலிருந்து நம்பெருமாள் மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

       
2வது புறப்பாடாக நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு அர்ச்சுன மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு நம்பெருமாளுக்கு இரவு 9.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை 365 வஸ்திரங்களும், 365 தாம்பூலங்களும், அரையர் சேவையுடன் 365 கற்பூர ஆரத்தியும் சமர்பித்தனர். இரவு 11.30 மணி முதல் இன்று அதிகாலை 2 மணிவரை நம்பெருமாள் முன் கைசிக புராணம் எனப்படும் பக்தர் நம்பாடுவான் வரலாற்றை பக்தி சிரத்தையோடு பெருமாள் முன் பட்டர் படித்தார். கைசிக புராணத்தை படித்தாலோ அல்லது கேட்டாலோ நற்பயன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதனை தொடர்ந்து அதிகாலை 5.15 மணிக்கு நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 2ம் பிரகாரத்தில் மேலப்படி வழியாக காலை 5.45 மணிக்கு கற்பூர படியேற்ற சேவை கண்டருளி காலை 6 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

நம்பெருமாள் படியேறும் போது பக்தர்கள் பச்சை கற்பூரப் பொடியை நம்பெருமாள் மீது தூவினர். இந்த கற்பூர படியேற்ற சேவையை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். கைசிக ஏகாதசியை முன்னிட்டு நேற்று இரவு முழுவதும் விடிய, விடிய பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன், உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், கண்காணிப்பாளர்கள் வெங்கடேசன், கோபாலகிருஷ்ணன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

பஞ்சப்பூரில் ரூ.17.60 கோடி மதிப்பில் புதிய ஆம்னி பேருந்து நிலையம் அடிக்கல் நாட்டு விழா

1 of 917

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்