‘நீட்’ தேர்வு, மும்மொழி கொள்கையை எதிர்ப்பதை போல மத்திய அரசின் வரி உயர்வையும் எதிர்த்து போராட வேண்டும்…!* முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை
”நீட்’ தேர்வு, மும்மொழி கொள்கையை எதிர்ப்பதை போல மத்திய அரசின் வரி உயர்வையும் எதிர்த்து போராட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் காரிய கமிட்டி கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம்.சரவணன் முதல்வருக்கு அனுப்பி உள்ள ஒரு கோரிக்கை மனுவில் தெரிவித்து இருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் கீழ் மாநகராட்சி மற்றும் உள்ளாட்சிகளில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, புதை வடிகால் உள்ளிட்ட அனைத்து
வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளீர்கள். உண்மையிலேயே இது வரவேற்கப்படக்கூடிய விஷயமாகும். இந்நிலையில் அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் சொத்து வரி என்பது 6% உயர்த்தி உள்ளதாகவும், வரி கட்ட தவறினால் காலதாமதத்திற்கு 1% வட்டி வசூலிக்கப்படும் என அறிவித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால் மத்திய அரசு வரியை உயர்த்தி உள்ளது. வரியை முறையாக வசூலித்தால் தான் மத்திய அரசினால் கொடுக்கப்படும் நிதி கொடுக்கப்படும் என நிர்பந்தம் செய்கிறது. அதனால் தான் வரியை உயர்த்தி உள்ளதாக கூறுகின்றனர். சொத்து வரியை ஒரேடியாக உயர்த்தி இருப்பது பொதுமக்களுக்கு அதுவும் அடித்தட்டு, நடுத்தர மக்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. காரணம் சாதாரண மக்கள் வீடு கட்டுவது என்பது ஒரு கனவு. அதுவும் வட்டிக்கு கடன் வாங்கி வீட்டைக் கட்டி குடி வந்தால் உடனே வரி உயர்வு வரும் என்பது சாமானிய ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகவும் கடினமாகும். எனவே, தமிழக மக்களுக்கு அப்பாவாக விளங்கிக் கொண்டிருக்கும் திராவிட மாடல் முதல்வர், எப்படி மத்திய அரசு கொண்டு வந்த மும்மொழி கொள்கை, நீட் தேர்வை எதிர்க்கிறாரோ அதேபோல வரி உயர்வையும் எதிர்த்து போராடி மக்களுக்கு சுமையை குறைக்க வேண்டும். அதுவரை ஏற்றிய வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT…👇
Comments are closed.