Rock Fort Times
Online News

ஜூனியர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய மகளிர் அணி மீண்டும் “சாம்பியன்”…!

2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வந்தது. நிக்கி பிரசாத் தலைமையிலான இந்திய அணி இந்த போட்டி தொடரில் தோல்வியை சந்திக்காமல் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. லீக் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ், மலேசியா, இலங்கையையும், சூப்பர் 6 சுற்றில் வங்காளதேசம், ஸ்காட்லாந்தையும் பந்தாடிய இந்திய அணி அரை இறுதியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை சாய்த்து இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற மற்றொரு அணியான தென் ஆப்பிரிக்க அணி லீக் சுற்றில் நியூசிலாந்து, சமோவ், நைஜீரியாவை தொடர்ச்சியாக வீழ்த்தியது. அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. அரை இறுதியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இந்த இரு அணிகள் மோதிய இறுதிப்போட்டி கோலாலம்பூரில் இன்று(02-02-2025) நடைபெற்றது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. தென் ஆப்பிரிக்க வீராங்கனைகளை பார்ட்னர்ஷிப் அமைக்க விடாமல் இந்தியா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தியது. 20 ஓவர்கள் முழுமையாக விளையாடிய அந்த அணி 82 ரன்களில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக மீகே வான் வூர்ஸ்ட் 23 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் கங்கோடி திரிஷா 3 விக்கெட்டுகளும், வைஷ்னவி சர்மா, ஆயூஷி சுக்லா மற்றும் பருனிகா சிசோடியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினர். இதனையடுத்து 83 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்தியா 11.2 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 84 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக திரிஷா 44 ரன்கள் எடுத்தார்.இதன் மூலம் தொடர்ந்து 2வது முறையாக இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தி உள்ளது. கடந்த முறையும் இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்