திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுகா, மட்டங்கல் நானாபுதுப்பட்டியைச் சேர்ந்த அன்பரசன் தனது குடும்பத்தினருடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்திருந்தார். அப்போது அவர், கோவில் வளாகத்தில் உள்ள முடி மண்டபத்தில் தனது குழந்தைகளுக்கு மொட்டை அடித்து விட்டு குளிப்பதற்காக சென்றிருந்தார். அப்போது அவருடைய 10 கிராம் தங்கச் சங்கிலி, ரூ.6000 ரொக்கம் , ஒரு செல்போன் ஆகியவற்றை அவரது மாமாவிடம் கொடுத்துவிட்டு குளிக்க சென்றுள்ளார். அதனை துணியில் சுற்றி வைத்துவிட்டு அவருடைய மாமாவும் குளிக்க சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகை மற்றும் பணம், செல்போன் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பி சென்றுவிட்டனர். பின்னர் குளித்துவிட்டு திரும்பி வந்து பார்த்த அன்பரசன் நகை, பணம், செல்போன் திருட்டுப் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து சமயபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Comments are closed.