Rock Fort Times
Online News

திருமண அழைப்பிதழ் கொடுப்பது போல மூதாட்டியிடம் கைவரிசை காட்டிய டிப் டாப் ஆசாமிகள் !

திருச்சியை அடுத்த மணிகண்டம் வாட்ஸ் நகர் பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி நல்லம்மாள் ( வயது 77). இவர் தனது மருமகளுடன் அந்தப் பகுதியில் வசித்து வந்தார். இதற்கிடையே மருமகள் ஒரு வேலை விஷயமாக வெளியூர் சென்று விட்டார். இந்த நிலையில் மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது டிப்டாப் இளைஞர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் அவரது வீட்டுக்கு வந்தனர். அவர்கள் திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்ததாக தெரிவித்தனர். உடனே மூதாட்டி நல்லம்மாள் வாங்க வாங்க உள்ளே வந்து உட்காருங்க என கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து மர்ம நபர்கள் இருவரும் இரு நாற்காலிகளில் போய் அமர்ந்து கொண்டனர். பின்னர் அவர்கள் மூதாட்டியிடம் உறவினர்கள் போல நலம் விசாரித்து பேசினர். மேலும் மதிய உணவை உங்களிடம் சாப்பிட விரும்புவதாக தெரிவித்தனர். உடனே மூதாட்டியும் உணவுகளை தயார் செய்ய தொடங்கினார். அப்போது அந்த மர்ம நபர் ஒருவர், தாங்கள் அணிந்திருக்கும் நகை நல்ல டிசைனாக இருக்கிறது. எந்த நகை கடையில் செய்து வாங்கினீர்கள் என கேட்டார். மேலும் அந்த நகையை ஒரு முறை பார்க்கலாமா? எனக் கேட்டுள்ளனர். உடனே நல்லம்மாள் தனது நகையை கழற்றி அவர்கள் கையில் கொடுத்துவிட்டு உணவு எடுப்பதற்காக சமையல் அறைக்குச் சென்றார். பின்னர் இருவருக்கும் உணவுகளை எடுத்துக் கொண்டு திரும்பிய போது அந்த மர்ம ஆசாமிகள் அந்த 2 பவுன் மதிப்புள்ள நகையை திருடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பறந்து விட்டனர். ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த மூதாட்டி உடனடியாக மருமகளுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் இது தொடர்பாக மணிகண்டம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில மணிகண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்