ஜெயலலிதாவின் திட்டங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும்…
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக கூட்டத்தில் தீர்மானம்...
வருகிற நாடாளுமன்றத் தேர்தலை எவ்வாறு சந்திப்பது? என்பது குறித்து திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சுப்பிரமணியபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ப.குமார் தலைமை வகித்து ஆலோசனை வழங்கி பேசினார்.
கூட்டத்தில், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைப்படி பூத் கமிட்டி அமைத்து 100 சதவீத வெற்றி பெற பணியாற்றுவது, திருச்சி மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகை எத்தனை குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளிப்படையாக அறிவித்து, அதற்கான பட்டியலை வெளியிட வேண்டும். திமுக அரசு தேர்தல் வாக்குறுதிப்படி அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் 2021 மே மாதம் முதல் கணக்கிட்டு உரிமைத் தொகை வழங்க வேண்டும். 1.5 கோடி தொண்டர்களுடன் ஜெயலலிதா விட்டுச் சென்ற அதிமுகவை குறுகிய காலத்தில் 2 கோடி தொண்டர்கள் கொண்ட கட்சியாக மாற்றி வழிநடத்தும் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எதிர்காலத்தில் கட்சி வளர்ச்சி, மக்கள் நலன் குறித்து எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக செயல்படுவது, மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட தாலிக்கு தங்கம், அம்மா இருசக்கர வாகனத்திட்டம், இலவச லேப்டாப் திட்டங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் அருணகிரி, பொருளாளர் நெட்ஸ் இளங்கோ, முன்னாள் எம்.எல்.ஏக்கள் சந்திரசேகர், பாலன், சின்னசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.