பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தமிழகம் முழுவதும் நடைபெறும். குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு அவனியாபுரத்தில் வருகிற 15-ந்தேதியும், பாலமேட்டில் 16-ந்தேதியும், அலங்காநல்லூரில் 17-ந் தேதியும் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 5-ந்தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இன்று பாலமேடு, அலங்காநல்லூரில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பாக முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, வெங்கடேசன் எம்.எல்.ஏ. மற்றும் அரசு அலுவலர்கள், விழாக் குழுவினர், கிராம மக்கள் முன்னிலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதேபோன்று பாலமேடு மஞ்சமலை ஆற்றுத்திடல் வாடிவாசலில் முகூர்த்தக் கால் விழா அமைச்சர் பி. மூர்த்தி தலைமையில் நடை பெற்றது. விழா குறித்து அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:- அரசு வழிகாட்டுதல்படி மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் சீறும் சிறப்புமாக நடைபெற உள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தொடங்கி வைக்க உள்ளார். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். ஜல்லிக்கட்டில் சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து பங்கேற்கலாம். காளைகளுக்கும் தற்போது மருத்துவ பரிசோதனை தொடங்கி நடைபெற்று வருகிறது. தகுதி பெறும் காளைகள் இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்கலாம். ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பு பரிசாக கார், பைக் மற்றும் டிராக்டர் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.