திருச்சி திருவெறும்பூர் சர்க்கார்பாளையம் பனையக்குறிச்சியை சேர்ந்த முத்துக்குமார் – சரஸ்வதி ஆகியோரின் மகன் கொம்பன் என்கிற ஜெகன் (வயது 30). எலக்ட்ரானிக் டெலி கம்யூனிகேஷன் பட்டதாரியான இவர், தனது 17 வயதில் அடிதடி வழக்கில் கைதானார். பின்னர் சிறையில் இருந்து விடுதலையான அவர் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு ரவுடியாக உருவெடுத்தார். 2012ம் ஆண்டு முதல் திருச்சி, பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அடிதடி, கொலை முயற்சி, கொலை வழக்கு, கூலிப்படையாக செயல்பட்டது உள்ளிட்ட 50 -க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது உள்ளன. இதனால், அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள சனமங்கலம் வனப் பகுதியில் கொம்பன் ஜெகன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரை சுற்றி வளைத்தனர். அப்போது ஜெகன், உதவி ஆய்வாளர் வினோத் என்பவரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதால், ரவுடி கொம்பன் ஜெகனை காவல்துறையினர் என்கவுண்டர் செய்தனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி ஜெகன் உடலில் 2 குண்டுகள் பாய்ந்திருந்தன. வலது இதயத்தில் ஒரு குண்டும், இடது மார்புக்கு கீழ் ஒரு குண்டும் பாய்ந்தன. லால்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ரவுடி ஜெகனின் உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கு உடற்கூறு ஆய்வு முடிந்த பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்க முயன்ற போது ஜெகனை சுட்டுக்கொலை செய்த காவல் ஆய்வாளரை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஏ.டி.எஸ்பி.கோடிலிங்கம் தலைமையில் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். நீண்ட நேரம் நீடித்த பேச்சுவார்த்தைக்கு பின்பு உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதனையடுத்து இரவு 10 மணியளவில் ஜெகனின் உடலை எடுத்துச் சென்றனர். இதையடுத்து அவரது இறுதி சடங்கு திருச்சி திருவெறும்பூரை அடுத்த பனையகுறிச்சி சர்க்கார் பாளையத்தில் அவரது இல்லத்தில் நடைபெற்றது. அங்கு ஜெகனின் ஆதரவாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் மாலை அணிவித்தனர். பின்னர் போலீசாரின் பலத்த பாதுகாப்போடு உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஓயாமரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.