தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் நடிகர் ஆர்யா. கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த இவர், 2005-ம் ஆண்டு வெளியான ‘அறிந்தும் அறியாமலும்’ என்கிற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து ‘நான் கடவுள்’, ‘மதராசபட்டினம்’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ராஜா ராணி’, ‘சார்பட்டா பரம்பரை’ உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆர்யா, நடிப்பது மட்டுமின்றி ‘தி ஷோ பீப்பிள்’ என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மூலமாக ‘அமர காவியம்’, ‘ஜீவா’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’, ‘ரெண்டகம்’, ‘கேப்டன்’, ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிப்பது, சினிமா தயாரிப்பது என்று இல்லாமல் உணவகம் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய தொழில்களிலும் ஆர்யா ஈடுபட்டு வருகிறார். அவரது தம்பி சத்யாவும் நடிப்புத் துறையில் இருந்து விலகி தொழில்களை கவனித்து வருகிறார். நடிகர் ஆர்யாவுக்கு சென்னையின் பல்வேறு பகுதிகளில் “ஸீ ஷெல்” என்கிற பெயரில் ஹோட்டல்கள் இயங்கி வருகிறது. இந்த உணவகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வேளச்சேரி, கொட்டிவாக்கம், கீழ்ப்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் இயங்கி வரும் ஆர்யாவின் ஹோட்டல்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (ஜூன் 18) காலை முதலே சோதனையை தொடங்கியுள்ளனர். வருமானத்திற்கு அதிகமாக அவர் சொத்து சேர்த்ததாகவும், வரி கட்டாமல் வரி ஏய்ப்பு செய்ததாகவும் ஆர்யா மீது புகார் எழுந்தது. இதையடுத்து கொச்சியில் இருந்து வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் ஆர்யாவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனைக்கு பின்னர் முழு விவரங்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
ஆர்யா மறுப்பு :
இந்நிலையில், சென்னையில் தனக்கு சொந்தமான ஓட்டல்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக வெளியான தகவலுக்கு ஆர்யா மறுப்பு தெரிவித்துள்ளார். “ஐடி ரெய்டு நடக்கும் ஓட்டலுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ரெய்டு நடக்கும் ஓட்டல் வேறு ஒருவருடையது”என கூறி இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் ஆர்யாவிடமிருந்து குன்ஹி மூசா என்பவர் இந்த உணவகங்களை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
Comments are closed.