பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா திருச்சி மாவட்ட பாஜக அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், வழக்கமாக அரசியல்வாதிகள் வீடுகளில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை முதன்முறையாக அரசு துறை அலுவலகத்தில் நடந்துள்ளது. இதை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த சோதனையில் மூன்று வகையான ஊழல், முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இதில் குவாட்டருக்கு பத்து ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்டுள்ளது, டெண்டரில் முறைகேடு நடந்துள்ளது, நூறுகோடி ரூபாய் ஆண்டுதோறும் டாஸ்மாக் மூலம் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. டாஸ்மாக பணியாளர்கள் நியமனம், இடமாற்றத்தில் முறைகேடு போன்றவற்றிலும் ஊழல் நடந்துள்ளது. டாஸ்மாக்கில் 1,000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறினாலும், 2 லட்சம் கோடி ரூபாய்வரை ஊழல் நடந்ததற்கு வாய்ப்பு உள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் சாராய ஊழல் நடைபெற்றது. தற்போது சென்னைக்கு வந்துள்ளது. பல மடங்கு டாஸ்மாக் ஊழல் நடந்துள்ளது. டெல்லியில் முதல்வர் இந்த ஊழலில் தொடர்பிருப்பது போன்று, இங்கு தொடர்ப்பு இருக்குமோ? என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆதாரம் இருப்பதால் தான் அமலாகத்துறை சோதனை நடத்தி உள்ளது. இந்த டாஸ்மாக் ஊழலை பொதுமக்களிடம் எடுத்து செல்லும் வகையில் நாளை மறுதினம் (மார்ச்-17) சென்னையில் டாஸ்மாக் ஊழலை கண்டித்து பாஜக சார்பில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் கடைகள் முன்பு போராட்டம் நடைபெற உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இளம் விதவைகள் அதிகம் உள்ளதாக கனிமொழி கூறியதுடன் மட்டுமல்லாமல் ஆட்சிக்கு வந்த உடன் டாஸ்மாக் கடையை மூட கையெழுத்து போடப்படும் என தெரிவித்தார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. திமுகவில் உள்ள தலைமை இந்த ஊழலில் ஈடுபட்டு இருக்க வாய்ப்புள்ளது திருச்சி உக்கிரகாளியம்மன் கோவில் திருவிழாவிற்காக பேனர் வைத்ததற்காக பாஜக மாநகர பொதுச்செயலாளர் உள்பட 6 பேர் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.இது காவல்துறையின் அராஜகத்தை காட்டுகிறது. இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். திமுக தலைமைக்கு தெரியாமல் இந்த ஊழல் நடைபெற்று இருக்க வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது விளையாட்டுப் பிரிவு மாநிலத் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, மாவட்டத் தலைவர் ஒண்டிமுத்து, முன்னாள் மாவட்ட தலைவர் ராஜசேகரன் நிர்வாகிகள் எஸ்பி சரவணன், கௌதம் நாகராஜ் , கார்த்தில், ஊடக பிரிவு முரளி, எம்பயர் கணேசன், வாசன் வேலி சிவகுமார், பாலசந்திரன், அழகேசன், இந்திரன், கிருஷ்ணமூர்த்தி, தினகரன், நடராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Comments are closed.