Rock Fort Times
Online News

தொகுதி பங்கீட்டில் பிரச்சனையா? இபிஎஸ் டெல்லி பயணம் ஏன்?* திருச்சியில் நயினார் நாகேந்திரன் பதில்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ளதால் அரசியல் களம் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரிந்து போட்டியிட்ட அதிமுகவும், பாஜகவும் இந்த சட்டமன்றத் தேர்தலில் இணைந்து களம் காண்கின்றன. இந்த கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அடிக்கடி தமிழகம் வந்து தேர்தல் பொதுக் கூட்டங்களில் உரையாற்றி வருகின்றனர். அந்தவகையில் நேற்று(மார்ச் 1) மதுரை வந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து திருச்சியில் மார்ச் 11-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று பேசுகிறார். இதற்காக திருச்சி பஞ்சப்பூர் மற்றும் சுப்பிரமணியபுரம் ஜி.கார்னர் ஆகிய இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு இடம் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது. அந்த இடங்களை பார்வையிடுவதற்காக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (மார்ச் 2) திருச்சி வந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், அதிமுகவிடம் பா.ஜனதாவுக்கு கூடுதல் தொகுதிகள் கேட்கப்படுகிறதா?, என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், தற்போதுவரை தொகுதிப் பங்கீடு குறித்து பேசவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பின்னர்தான் அதுகுறித்து பேசப்படும் என தெரிவித்தார். தவெக இணைய வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு, அதுபற்றி அவர்களிடம்தான் கேட்க வேண்டும் என்றார். இபிஎஸ்-ன் டெல்லி பயணம் தொடர்பான கேள்விக்கு, அதுகுறித்து இபிஎஸ் க்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் தான் தெரியும் என்றார். மேலும் அவர் கூறுகையில், அனைத்து வகையிலும் இன்று தமிழ்நாடு தாழ்ந்து போயுள்ளது. கையில் புத்தகம் வைத்திருக்க வேண்டிய மாணவர்கள் கையில் கஞ்சா உள்ளது. குழந்தை முதல் வயதான பெண்கள்வரை நடமாட முடியவில்லை இன்று. தேசிய மகளிர் ஆணையம் 50% பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலம் தமிழ்நாடு எனக் கூறியுள்ளது. இந்தியாவிலேயே அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. திமுகவின் ஒரே நோக்கம் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக்குவது. அதற்காகத்தான் இந்த தேர்தலை சந்திக்கின்றனர். பண பலம், அதிகார பலத்தை அனைத்து இடத்திலும் கொண்டுள்ளனர். ஆனால் அதைவிட மக்கள் பலம்தான் பெரிது என்பதை இந்தத் தேர்தல் நிருபிக்கும் என்று தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்