Rock Fort Times
Online News

தொண்டர்களின் ஆபாச தாக்குதலை வேடிக்கை பார்ப்பதா? விஜய்க்கு மாதர் சங்கம் கண்டனம்…!

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளார். அவரது கட்சி வருகிற சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக களம் காண்கிறது. இந்த கட்சி தமிழக அரசியலில் அடியெடுத்து வைத்தது முதலே, பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக கரூர் சம்பவம், விஜயின் கடைசி படமான ஜனநாயகன் சென்சார் பிரச்சனை இப்படி பிரச்சனை மேல் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. தற்போது விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இதற்கு பிரபல நடிகை ஒருவரே காரணம் என்று கூறப்படுகிறது. விஜய் எதைச் செய்தாலும் அது சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறிவிடுகிறது. அப்படித்தான் விவாகரத்து வழக்கும் விவாத பொருளாக மாறி உள்ளது. எதிர்க்கட்சியினர் ஏதேதோ சொல்ல அதற்கு விஜய் ரசிகர்களும், தொண்டர்களும், பெண் ரசிகர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள். அப்போது அவர்கள் சில ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த ஆபாச தாக்குதலுக்கு விஜய் எந்த கண்டனமும் தெரிவிக்காமல் அமைதியாக இருக்கிறார். அவரது இந்த செயலுக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சங்கீதாவை விமர்சிப்பவர்களை கண்டிக்காமல் விஜய் மவுனம் காப்பதா? என கேள்வி எழுப்பியுள்ள மாதர் சங்கம், ‘சங்கீதா விவாகரத்துக்கு மனுதாக்கல் செய்திருப்பது தனிப்பட்ட சட்ட நடைமுறை. தனிப்பட்ட விவகாரத்தை சமூக வலைத்தளம் மற்றும் பொதுவெளியில் ஆபாசமாக விவாதிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. விஜய்யின் பெயரைச் சொல்லிக் கொண்டு இயங்கும் சில தொண்டர்கள் சங்கீதாவை இழிவுபடுத்தி வருகின்றனர். சங்கீதா மீது ஆபாச தாக்குதல் நடத்துபவர்கள் மீது விஜய் எதிர்வினையாற்றி ஆபாச அர்ச்சனைக்கு முடிவு கட்ட வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்