“நீட்” தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதே தடை உத்தரவை மத்திய பிரதேச உயர்நீதிமன்றமும் பிறப்பித்துள்ளது. கடந்த மே 4-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு நாளில் ஆவடியில் அமைந்துள்ள ஒரு தேர்வு மையத்தில் கனமழை காரணமாக மின் தடை ஏற்பட்டதால் குறைந்த வெளிச்சத்தில் அசௌகரியமான சூழலில் மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர். இதனையடுத்து, தங்களுக்கு மறு தேர்வு நடத்த வேண்டும் என, ஆவடி தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 13 மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மின் தடையால் குறைந்த வெளிச்சத்தில் முழு திறனுடன் தேர்வு எழுத இயலாததை அவர்கள் சுட்டிக்காட்டி மறு தேர்வு எழுத உத்தரவிடக் கோரினர். இந்த வழக்கு இன்று( மே 17) விசாரணைக்கு வந்த நிலையில் மாணவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பது குறித்து பதில் அளிக்க, மத்திய அரசு அவகாசம் அளிக்க வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் அதுவரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்ததுடன் வழக்கு விசாரணையை ஜூன் இரண்டாம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
Comments are closed.