இந்திய பெண்கள் அணி இப்போது உலக சாம்பியன். ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று அசத்தியுள்ளது இந்திய அணி. லீக் சுற்றின் ஒருகட்டத்தில் தொடர்ந்து 3 போட்டிகளில் தோற்றிருந்தது இந்திய அணி. அவர்களால் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், மிகச் சிறப்பாக ‘கம்பேக்’ கொடுத்து, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வெளியேற்றிய இந்திய அணி, இப்போது சாம்பியனும் ஆகியிருக்கிறது. மிகமுக்கியமான இந்த இறுதிப் போட்டியில் பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்து ஏரியாவிலும் முழுமையான செயல்பாட்டைக் கொடுத்தது இந்திய அணி. இந்த வெற்றியைப் பெற முக்கியமான கட்டங்களில் இந்திய வீராங்கனைகள் தங்கள் அணுகுமுறைகளை மாற்ற வேண்டியிருந்தது, பெரும் எழுச்சியைக் காண வேண்டியிருந்தது, உறுதியாகப் போராட வேண்டியிருந்தது. இவை அனைத்தையுமே கனகச்சிதமாக செய்து அசத்தியுள்ளது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி.
பரிசுத்தொகை:
இந்த உலகக் கோப்பை தொடரில் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், அதிக ரன்கள் முதல், சதங்கள் வரை என பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பரிசுத்தொகையிலும் நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய மகளிர் அணிக்கு கோப்பையுடன் சேர்த்து, இந்திய மதிப்பில் ரூ.39.83கோடி (தோராயமாக மதிப்பு) பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டியில் தோல்வியைச் சந்தித்து இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு ரூ.19.91 கோடி பரிசுத்தொகையாக வழங்கபட்டுள்ளது. அதேசமயம் அரையிறுதி சுற்றுடன் வெளியேறிய ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கு ரூ.9.8 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நடப்பு உலகக்கோப்பை தொடருக்கான ஒட்டுமொத்த பரிசுத்தொகையானது ரூ.122.5 கோடியாக ($13.88 மில்லியன் டாலர்கள்) உயர்த்தப்பட்டுள்ளது. இது முந்தைய உலகக்கோப்பை தொடருக்கான பரிசுத் தொகையைக் காட்டிலும் 297 சதவீதம் அதிகமாகும். முந்தைய மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான பரிசுத்தொகையானது $3.5மில்லியனாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் அதிகபட்ச பரிசுத் தொகையாகவும் இது அமைந்துள்ளது. இதற்கு முன் கடந்த 2023ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ரூ.83 கோடி ($10மில்லியன், 2023-ன் கணக்கு படி) பரிசுத்தொகையாக வழங்கப்பட்ட நிலையில், தற்சமயம் அதனைவிட மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு அதிக பரிசுத்தொகை வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ள இந்திய மகளிர் அணிக்கு பிசிசிஐ தரப்பில் ரூ.51 கோடி பரிசுத்தொகையானது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா அறிவித்துள்ளார்.
Comments are closed.