தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து இருந்தார். ஆனால், நிதி நெருக்கடி காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த திட்டம் தொடங்கப்படவில்லை. தற்போது நிலைமை சீரடைந்துள்ளதால் இந்த திட்டத்தின் தொடக்க விழா பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் நாளை ( 15.09.2023 ) நடக்கிறது. இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.இதற்காக காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் பிரம்மாண்ட பந்தல் மற்றும் அலங்கார வேலைபாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அண்ணா பிறந்த நாளை ஒட்டி தொடங்கப்பட உள்ள இந்த திட்டத்திற்கு முன்னதாக காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா இல்லத்தில் உள்ள சிலை மற்றும் மாநகராட்சியில் உள்ள அண்ணா சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடங்கி வைக்கிறார். விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் அரசியல் கட்சி முக்கிய நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.