திருச்சியில் லஞ்சம் வாங்கிய வட்டார பெண் கல்வி அதிகாரி கைது…* லஞ்ச ஒழிப்பு போலீசார் விரித்த வலையில் வசமாக சிக்கினார்!
திருச்சி, நகர வட்டார கல்வி அதிகாரி லதா பேபி, கூடுதல் பொறுப்பாக வையம்பட்டி வட்டார கல்வி அதிகாரியாகவும் பணிபுரிந்து வருகிறார். இவரது கட்டுப்பாட்டின் கீழ் மணப்பாறையைச் சேர்ந்த விமலா என்ற பள்ளி ஆசிரியை பணிபுரிந்து வந்தார். தற்போது பணிமாறுதலில் வேறு பள்ளிக்கு சென்றுவிட்டார். ஜூலை மாதத்தில் மேற்படி பள்ளி ஆசிரியை 4 நாட்கள் பணி புரிந்தமைக்காக ஊதியம் வழங்கப்படாமல் இருந்து வந்துள்ளது. அந்த ஊதியத்தை தற்போது பெறும் பொருட்டு, அதற்கான சான்று கேட்டு, வையம்பட்டி வட்டார கல்வி அலுவலர் லதா பேபியை சந்தித்தபோது, அவர் சான்று வழங்க ரூ.1,500 லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ஆசிரியை விமலா இன்று (டிச.15) திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் கொடுத்தார். அவர்களது ஆலோசனையின் பேரில், வட்டார கல்வி அலுவலர் லதா பேபி லஞ்சப்பணம் ரூ.1,500-ஐ விமலாவிடமிருந்து பெற்ற போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், சேவியர்ராணி ஆகியோர் பாய்ந்து சென்று லதா பேபியை பிடித்து கைது செய்தனர். திருச்சி நகர, வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.