திருச்சியில் மூதாட்டியின் செயினை பறிக்க முயன்ற நபரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். திருச்சி, சிங்காரத்தோப்பு, என்.எஸ்.பி.ரோடு, பெரிய கடை வீதி, சின்ன கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் இங்கு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர்.. இந்த நிலையில் திருச்சி பெரிய கடை வீதி பகுதியில் நேற்று ( டிச.19 ) இரவு மூதாட்டி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவ்வழியாக வந்த ஒரு நபர் மூதாட்டி அணிந்திருந்த தங்க செயினை பறித்துக்கொண்டு தப்ப முயன்றுள்ளார். அப்பொழுது மூதாட்டி சத்தம் போடவே, அங்கிருந்தவர்கள் உடனடியாக அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். தொடர்ந்து இதுகுறித்து கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்து அழைத்து சென்றனர். அவர் யார்? தொடர்ந்து இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.