Rock Fort Times
Online News

த.வெ.க.விலும் பதவி சண்டை: விஜய் அலுவலகம் முன்பு தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு…!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் குறைந்த மாதங்களே இருப்பதால் அரசியல் களம் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளது. இரண்டு மாநாடுகளை வெற்றிகரமாக முடித்துள்ள விஜய், தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். விஜய் கட்சியில் அமைப்பு ரீதியாக தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் 120 ஆக பிரிக்கப்பட்டு இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் வீதம் மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதில், பல மாவட்டங்களில் பதவி தொடர்பாக பிரச்சனைகள் ஏற்பட்டதால் 131 மாவட்டங்களாக உயர்த்தப்பட்டது. 120 மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 11 மாவட்டங்களுக்கு பல மாதங்களாக மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்படவில்லை. இந்தநிலையில், விடுப்பட்ட மாவட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளுக்கு பொறுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (23-12-25) சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று, பொறுப்பு வழங்கப்படுபவர்களுக்கு ஆணைகளை வழங்கவுள்ளார். இந்தசூழ்நிலையில், தூத்துக்குடி மாவட்ட தவெகவை சேர்ந்த அஜிதா என்பவர், தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கவில்லை என பனையூரில் உள்ள அலுவலகம் முன்பு தனது ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இவர், ஆரம்ப காலம் முதல் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்து பணியாற்றி வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால், அவருக்கு பதவி வழங்காமல் மாற்று கட்சியில் இருந்து தவெகவில் இணைந்த வேறு ஒருவருக்கு பதவி வழங்கப்படவுள்ளதாக அறிந்த அவர், விஜய் காரை மறித்து முறையிட்டதாக தெரிகிறது. இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்