Rock Fort Times
Online News

தமிழ்நாட்டில் கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களே இல்லை என்கிற நிலை உருவாகி உள்ளது…

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாதிரி பள்ளிகளில் பயின்று அதன்மூலம் CLAT தேர்வெழுதி தேர்ச்சி பெற்று திருச்சியில் உள்ள தேசிய சட்டப் பள்ளியில் சேர்ந்துள்ள 17 மாணவ, மாணவிகளுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துரையாடினார் . பின்னர் அவர் பேசியதாவது :-
அரசு பள்ளி மாணவர்கள் பல்வேறு சாதனைகள் படைத்து வருகிறார்கள். நம் அரசியல் அமைப்பு சட்டத்தில் முதன்முதலாக இட ஒதுக்கீடு தொடர்பாக தான் திருத்தம் செய்யப்பட்டது. எல்லோருக்கும் எல்லாம் என்பதை நீதி கட்சி காலத்தில் இருந்தே செயல்படுத்தி வருகிறோம். இன்றைய முதலமைச்சரும், அதை திராவிட மாடல் என சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். யார் சொன்னாலும் நம்பக்கூடாது நம்முடைய அறிவை பயன்படுத்த வேண்டும் என பெரியார் கூறியுள்ளார். அதன்படி நீங்கள் கல்வி கற்க வேண்டும், செயல்பட வேண்டும். ஆங்கிலம் கற்றுக் கொள்வது மிகப்பெரிய சவால் இல்லை. அது ஒரு தொடர்புக்கான மொழிதான்.

உலக அளவில் சிறந்த முறையில் செயல்பட ஆங்கிலம் கட்டாயம் தேவை. அதனால் அதை அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும். மாதிரி பள்ளிகள் மூலமாக போட்டி தேர்வுகள் நடத்தி அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், அதை அவர்கள் எதிர்கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும் என சிந்தித்து மாதிரி பள்ளிகளை உருவாக்கினோம். அதை செயல்படுத்தியும் காட்டியுள்ளோம். நீங்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து விட்டோம் என நின்றுவிடாமல் உங்கள் பகுதிகளை சேர்ந்த போட்டி தேர்வுகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத மாணவர்களுக்கு எடுத்துக் கூறி அவர்களையும் தேர்வெழுத வைத்து தேர்ச்சி பெற செய்ய வேண்டும். நீங்கள் அனைவரும் ஒரு தூதுவராக செயல்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் கல்வியில் பின்தங்கியுள்ள மாவட்டம் என சில மாவட்டங்களை கூறுவார்கள். இன்று அந்த நிலை மாறியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்று வருகிறார்கள். கல்வியில் பின் தங்கிய மாவட்டம் இல்லை என்கிற நிலை இன்று உருவாகி உள்ளது. ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டு காலங்களில் மாணவர்களுக்காக 51 திட்டங்களை பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தி உள்ளோம். இன்று ஒரு மாவட்டத்திற்கு ஒரு மாதிரி பள்ளி இருப்பது, நாளை ஒரு தொகுதிக்கு ஒரு மாதிரி பள்ளியாக மாற்றுவதற்கான ஏற்பாட்டை தொடங்கியுள்ளோம். கடந்த இரண்டு ஆண்டுகளில்தான் அரசு பள்ளிகளிலிருந்து தேசிய சட்டப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்ந்துள்ளார்கள் என கூறுகிறார்கள். இது உண்மையில் எங்களுக்கு பெருமையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மேலும், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கினார். அரசு பள்ளியில் பயின்று தேசிய சட்டப் பள்ளியில் சேர்ந்துள்ள மாணவ மாணவிகளுக்கான கல்வி செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்றுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்