புதுக்கோட்டையில் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓட முயன்ற கைதியின் கால் முறிந்தது ! அரசு மருத்துவமனையில் அனுமதி
புதுக்கோட்டை அடப்பன்வயலை சேர்ந்தவர் கார்த்தி என்கிற உச்சி கார்த்தி (வயது 24). இவர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று அடப்பன் வயலைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரை முன் விரோதம் காரணமாக கார்த்தி அரிவாளால் வெட்டினார். இதில், பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக திருக்கோகர்ணம் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தியை கைது செய்தனர். அவரை சிறையில் அடைப்பதற்கு முன்பு மருத்துவ பரிசோதனைக்காக போலீஸ் ஜீப்பில் இன்ஸ்பெக்டர் செல்லதுரை தலைமையிலான போலீசார் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சிப்காட்டில் இருந்து தஞ்சாவூர் சாலையில் இடையப்பட்டி அருகே சென்றபோது கார்த்தி சிறுநீர் கழிக்க வேண்டும் என போலீசாரிடம் கூறினார். உடனே சாலையோரம் போலீசார் ஜீப்பை நிறுத்தினர். கார்த்தி சிறுநீர் கழிக்க சென்றார். போலீசார் பாதுகாப்புக்காக நின்றனர். அப்போது கார்த்தி திடீரென தப்பி ஓடினார். சிறிது தூரம் ஓடிய பிறகு தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு இடது கால் முறிந்தது. இதற்கு மேல் அவரால் ஓட முடியவில்லை. உடனே, விரட்டி வந்த போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.