Rock Fort Times
Online News

ஐ.எஃப்.எஸ். நிறுவனம்  ரூ.6,000 கோடி மோசடி விவகாரம்: ரூ.5 கோடி லஞ்சம் வாங்கிய டிஎஸ்பி கபிலன் சஸ்பெண்ட்!

வேலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நிதி நிறுவனம் ஐ.எஃப்.எஸ். இந்த நிறுவனம் பொதுமக்களிடம் பணம் வசூலிக்க பல்வேறு கவர்ச்சித் திட்டங்களை அறிவித்தது. முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தரப்படும் எனவும் விளம்பரம் செய்தது. ஐ.எஃப்.எஸ். நிறுவனத்தின் இந்த விளம்பரத்தை நம்பி மொத்தம் 89,000 பேர் இந்நிறுவனத்தில் சுமார் ரூ6,000 கோடி முதலீடு செய்தனர். ஆனால் முதலீட்டாளர்களுக்கு வாக்குறுதி அளித்தபடி பணம் திருப்பித் தரப்படவில்லை. இது தொடர்பாக போலீசில் பொதுமக்கள் புகார் கொடுத்தனர். போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மொத்தம் 19 பேர் இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இவர்களில் 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டு பணம், கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 16 கார்கள், 49 அசையா சொத்துகளும் இந்த சோதனைகளில் சிக்கின. இதனிடையே இவ்வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்க குற்றம்சாட்டப்பட்டோரிடம் ரூ.5 கோடி லஞ்சம் பெற்றார் பொருளாதாரப் பிரிவு டிஎஸ்பி கபிலன் என ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.இது தொடர்பாக கபிலனின் நீலாங்கரை வீட்டிலும் போலீசார் விசாரணை நடத்தினர். அவரிடம் துறை ரீதியாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் கபிலன் ரூ5 கோடி லஞ்சம் பெற்றது உறுதியானது. இதனடிப்படையில் தற்போது பொருளாதார குற்றப் பிரிவு டிஎஸ்பி கபிலன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பொருளாதாரக் குற்றப்பிரிவு ஏடிஜிபி அபின் தினேஷ் மேடாக் இதற்கான உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்