கோரிக்கைகள் நிறைவேற்றப்படா விட்டால் சிக்கன் பிரியாணிக்கு சிக்கல் வரும்… * கோழி உற்பத்தியாளர்கள் எச்சரிக்கை!
‘அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால், ஜனவரி முதல் கறிக்கோழி உற்பத்தியை நிறுத்துவோம். தமிழகம் முழுவதும் இறைச்சி கடைகளில் கோழிக்கறி கிடைக்காத நிலை உருவாக்கப்படும். தேர்தல் நேரத்தில் சிக்கன் பிரியாணிக்கு சிக்கல் ஏற்படும்’ என, கறிக்கோழி பண்ணை உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கறிக்கோழி பண்ணைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். பண்ணை உரிமையாளர்களுக்கு, தனி நல வாரியம் அமைக்க வேண்டும். வளர்ப்பு கூலியை அதிகரிக்க, அரசு உதவ வேண்டும் என்பன உஎன்ப 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை எழும்பூரில், நேற்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், கறிக்கோழி பண்ணை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டம் ஆர்ப்பாட்டம் குறித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறியதாவது:-
கறிக்கோழி நிறுவனங்கள், கறிக்கோழிப் பண்ணை உரிமையாளர்கள் மற்றும் தமிழக அரசு சார்பில், ஆண்டு தோறும் முத்தரப்பு பேச்சு நடத்தி, வளர்ப்பு கூலி நிர்ணயம் செய்யப்படும் என 2013ல் தமிழக அரசு தெரிவித்தது. ஆனால், இதுவரை கூட்டம் நடத்தப்படவில்லை..கறிக்கோழி வளர்க்கும் விவசாயிகளுக்கு வளர்ப்பு கூலியாக 6.50 ரூபாய் வழங்கப்படுகிறது. இதை, 15 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். கறிக்கோழி நிறுவனங்கள், ஆண்டுக்கு 6 முறை கோழிகள் கொடுத்து வந்த நிலையில், தற்போது சராசரியாக 3 முறை மட்டுமே வழங்குகின்றன. இதனால், விவசாயிகள் வாங்கிய கடனை அடைக்க முடியவில்லை. எங்கள் கோரிக்கைகளை, அரசு நிறைவேற்றாவிட்டால், வரும் ஜனவரி முதல், தமிழகம் முழுவதும் உள்ள 40 ஆயிரம் கறிக்கோழி பண்ணை உரிமையாளர்களையும் ஒருங்கிணைத்து, உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். தமிழகம் முழுவதும் இறைச்சி கடைகளில், கோழிக்கறி கிடைக்காத நிலை உருவாக்கப்படும். இதன் எதிரொலியாக, வரும் தேர்தல் நேரத்தில் சிக்கன் பிரியாணிக்கு சிக்கல் ஏற்படும். எனவே, எங்கள் கோரிக்கைகளை, அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Comments are closed.