Rock Fort Times
Online News

டிசம்பர் 4-க்குள் எஸ்.ஐ.ஆர். படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும்…* தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்!

டிசம்பர் 4-ம் தேதிக்குள் எஸ்.ஐ.ஆர். படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான கணக்கீட்டு படிவங்களை பெற்றுக்கொண்ட வாக்காளர்கள் தங்கள் படிவங்களை உடனடியாக பூர்த்தி செய்து, கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க வருகிற 4-ந்தேதி வரை காத்திருக்காமல் வாக்குச்சாவடி நிலை அலுவலர் அல்லது உதவி மையத்தில் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து ஒப்படைத்துள்ள அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் 9-ந்தேதி அன்று வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும். 2002 மற்றும் 2005 வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளர் தனது பெயர் அல்லது உறவினரின் பெயரை கண்டறிய இயலாத நிலையில் 4-ந்தேதிக்குள் பிற விவரங்கள் நிரப்பப்பட்ட கணக்கீட்டு படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைத்தால், அந்த வாக்காளரின் பெயர் 9-ந்தேதி வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும். ஆனால், கணக்கீட்டு படிவத்தை சமர்ப்பிக்காத பட்சத்தில், அந்த வாக்காளரின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது. மூன்று முறை வீடு தேடிசென்றும் கணக்கீட்டு படிவம் வழங்க முடியாத வாக்காளர்களின் பெயர்கள், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது. வரைவு வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளரின் பெயர் இல்லையெனில், உரிமைக்கோருதல் காலத்தில் படிவம் 6-உடன் உறுதிமொழிப் படிவத்தை இணைத்து அவரது பெயரை புதியதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். உரிமை கோரல் காலம் டிசம்பர் 9-ந்தேதி முதல் ஜனவரி 8-ந்தேதி வரை நடைபெற உள்ளது. அப்போது வாக்காளர்கள் பெயர் சேர்க்க, நீக்க மனு கொடுக்கலாம். மேலும்,வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுக்கு அந்த சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பட்டியலில் வாக்காளராக பதிவு பெற்றவர் எதிர்ப்பு தெரிவிக்கலாம். அறிவிப்புக் காலம் வருகிற 9-ந்தேதி முதல் ஜனவரி 31-ந்தேதி வரை நடைபெறும். இந்த காலகட்டத்தில் வாக்காளரின் தகுதியை ஆய்வு செய்த பிறகு தேவையானால் வாக்காளர் பதிவு அலுவலரால் அந்த வாக்காளர்களுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, விசாரணை நடத்தப்படும். வாக்காளரின் அனைத்து உரிமை கோரல்கள் மற்றும் மறுப்புரை பரிசீலிக்கப்பட்ட பின், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதம் 7-ந்தேதி வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்