கோவை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று ( ஏப்.4 ) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் மாநில பாஜக தலைவர் தேர்தல் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அண்ணாமலை, தமிழக பாஜகவின் புதிய தலைவருக்கான தேர்தல் விரைவில் நடைபெறும். புதிய மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை. புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் போது இதை பற்றி நிறைய பேசுவோம் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், எங்கள் கட்சியில் போட்டியெல்லாம் இல்லை. எல்லோரும் சேர்ந்து ஒருவரை தலைவராக தேர்ந்தெடுப்பது வழக்கம். அதனால் தான் அப்படி சொன்னதாக கூறினார். மாநில தலைவராக இல்லை என்றால் என்ன செய்ய போகிறீர்கள் ? என கேட்டதற்கு, என்னுடைய பணி எப்போதும் தொண்டனாக தொடரும். ஊழலுக்கு எதிராக செயல்படவே நான் அரசியலுக்கு வந்தேன், அதனால் சமரசம் செய்துகொள்ளமாட்டேன். தமிழகத்தில் நல்ல ஒரு ஆட்சியை கொண்டுவர வேண்டும் முயற்சி தொடரும் என கூறினார். 2026 தேர்தல் தமிழக மக்களுக்கு முக்கியம். மக்கள் மீண்டும் இதே ஆட்சியின் கீழ் இருக்கக்கூடாது. எனவே ஒரு தொண்டனாக கட்சி சொல்லும் பணியை செய்வேன் என கூறினார். அவரிடம், விரைவில் உங்களை மத்திய அமைச்சராக பார்க்கலாமா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, இந்த மண்ணை விட்டு எங்கும் செல்லமாட்டேன் என்றார்.
Comments are closed.