உடல் நலக்குறைவு காரணமாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்திய போதிலும் மருத்துவமனையில் இருந்தபடியே மக்கள் பணியாற்றி வருகிறார். “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் குறித்தும், மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாகவும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 4-வது நாளாக இன்றும்( ஜூலை 24) முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர் சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் துரைமுருகன் சந்தித்து நலம் விசாரித்தார். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனையில் எந்தவொரு சிறிய அடைப்பும் இல்லை. ஆஞ்சியோ பரிசோதனைக்குப் பிறகு, நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். ஒரு பிரச்சினையும் இல்லை. எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பதை மருத்துவர்களே சொல்வார்கள் என்று கூறினார். இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட தலைசுற்றல் பிரச்சினை தொடர்பாக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளில் இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே இந்த தலைசுற்றல் ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதய சிகிச்சை மருத்துவர் டாக்டர் ஜி.செங்குட்டுவேலு தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுரையின்படி, இதனை சரி செய்வதற்கான சிகிச்சைமுறை அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை செய்யப்பட்டது. இன்று மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையும் இயல்பாக இருந்தது. முதல்வர் நலமாக உள்ளார். தனது வழக்கமான பணிகளை இரண்டு நாட்களில் மேற்கொள்வார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments are closed.