Rock Fort Times
Online News

கரூரில் மட்டும் இது எப்படி நடந்தது? மக்கள் எல்லா உண்மைகளையும் சொல்லும் போது கடவுளே நேரில் வந்து சொன்ன மாதிரி இருக்கு…விஜய் உருக்கம்…! (வீடியோ இணைப்பு)

கரூர் வேலுசாமிபுரத்தில், செப்டம்பர் 27ம் தேதி சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்துகொண்ட பரப்புரையில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக ஞாயிற்றுக்கிழமை உருக்கமாக அறிக்கை வெளியிட்ட விஜய்,
உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும், கூடிய விரைவில் கரூர் மக்களை சந்திப்பேன் என்று தெரிவித்து இருந்தார். இந்நிலையில், இன்று(செப்.30) உருக்கமாக பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என் வாழ்க்கையில் இதுபோன்ற வலிமிகுந்த சூழலை நான் எதிர்கொண்டதில்லை. மனம் முழுக்க வலியாக உள்ளது. வலி மட்டும்தான் உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் என்னை மக்கள் பார்க்க வருகின்றனர். ஆனால், நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. நானும் மனிதன் தானே, அவ்வளவு பேர் பாதிக்கப்பட்டிருக்கும்போது என்னால் எப்படி அங்கு போக முடியும். வேறு சில பதட்டங்கள், சூழல்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே நான் மீண்டும் அங்கு செல்லவில்லை. என் மீதான பாசத்தாலேயே அவர்கள் வருகின்றனர். அந்த பாசத்திற்கு நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். அவர்கள் கொடுத்த இடத்தில் தான் நான் பேசினேன். வேறு என்ன தவறு செய்தேன். எனக்காக குரல் கொடுத்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கிட்டத்தட்ட 5 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். ஆனால், கரூரில் மட்டும் இது எப்படி நடந்தது? மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கரூரை சேர்ந்த மக்கள் உண்மையை சொல்லும்போது, எனக்கு கடவுளே வந்து உண்மையை கூறியது போல் இருந்தது. விரைவில் எல்லா உண்மைகளும் தெரியவரும்”. விரைவில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பேன். சிஎம் சார்… என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். நான் எனது வீட்டிலோ, கட்சி அலுவலகத்திலோ தான் இருப்பேன். என் தொண்டர்களையும் என் மக்களையும் ஒன்றும் செய்து விடாதீர்கள். தற்போது எனது கட்சி நிர்வாகிகளையும், வீடியோ வெளியிடும் தொண்டர்களையும் கைது செய்கிறீர்கள். மீண்டும் அதிக உத்வேகத்துடன் வருவேன். இவ்வாறு அவர் உருக்கமாக கூறியுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்