திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்ட கார் ஜி கார்னர் பகுதிக்கு வந்தது எப்படி? -போலீசார் விசாரணை…!
தஞ்சாவூர், மாதா கோட்டை பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் திருச்சிக்கு வந்திருந்தார். பின்னர் இங்கிருந்து கரூர் பரமத்தி வேலூருக்கு சென்று கொண்டிருந்த பொழுது திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பிரபல ஹோட்டலில் சாப்பிட முடிவு செய்தார். அதன்படி தனது காரை அந்த ஹோட்டலில் முன்புறம் நிறுத்தி “லாக்” செய்து விட்டு அனைவரும் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். பின்னர் வந்து பார்த்தபோது தனது காரை காணாமல் கிருஷ்ணமூர்த்தி திடுக்கிட்டார். சாவி தன்னிடம் இருக்கும்போது கார் எப்படி திருட்டு போனது என வியப்படைந்த அவர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டபோது முககவசம் அணிந்த ஒரு நபர் காரை திருடி ஓட்டி செல்வது பதிவாகி இருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது அந்தக் கார் திருச்சி ஜி.கார்னர் பகுதியில் அனாதையாக நின்று கொண்டிருந்தது. போலீசார் அந்த காரை மீட்டு கிருஷ்ண மூர்த்தியிடம் ஒப்படைத்தனர். லாக் செய்யப்பட்ட காரை மர்ம நபர் திருடி சென்றது எப்படி?, ஜி கார்னர் பகுதியில் ஏன் விட்டுச் சென்றார்? அந்த மர்ம நபர் யார்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments are closed.