தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி 39 தொகுதிகளிலும் தோல்வியையே தழுவியது. பல தொகுதிகளில் “டெபாசிட்” இழந்தது. தோல்வி தொடர்பாக நெல்லை மாவட்ட பாஜக தலைவர் தமிழ்செல்வனும், இந்து மக்கள் கட்சி மாநில நிர்வாகி உடையாரும் பேசிய ஆடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில், தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் பாஜக தோல்வி அடைந்தது வேதனையாக உள்ளது, பாஜகவினர் உட்கட்சி வேலை செய்து விட்டார்களா என இந்து மக்கள் கட்சி நிர்வாகி பாஜக மாவட்ட தலைவரிடம் கேள்வி எழுப்புகிறார். அதற்கு அவர் உண்மைதான் ஒழுங்காக வேலை செய்யவில்லை. நயினார் நாகேந்திரன் பணத்தை கட்சிக்காரர்களிடம் கொடுக்கவில்லை. உறவினர்களிடம் மட்டுமே கொடுத்துள்ளார். இதனால் மற்ற நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். பணமும் சரியான முறையில் யாருக்கும் சென்று சேரவில்லையென கூறுகிறார். தொடர்ந்து பேசும் இந்து மக்கள் கட்சி நிர்வாகி, கட்சியை வளர்த்தவர்களை எல்லாம் வேலை செய்ய விடவலிலை. பாஜக, தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்றால் கலவரம் செய்ய வேண்டும் என தெரிவிக்கிறார். இந்து முன்னணி நிர்வாகியின் இந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் கட்சி கொள்கைகளுக்கு விரோதமாக கலவரம் செய்தால் தான் பாஜக வளரும் என்று தொலைபேசி உரையாடலில் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ள இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், உடையாரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்டிருந்தார்.
இந்த சூழ்நிலையில், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக இந்து மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் உடையார் நெல்லையில் கைது செய்யப்பட்டார். தமிழ்நாட்டில் பாஜக வளர கலவரம் செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி நிர்வாகி உடையார் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் பாளையங்கோட்டை எஸ்.ஐ. துரைபாண்டி அளித்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Comments are closed.